பா.ஜனதா நிர்வாகிகள் ஆலோசனை : எடியூரப்பா தலைமையில் பெங்களூருவில் நடந்தது

கூட்டணி ஆட்சியில் நிலவும் நிலை குறித்து எடியூரப்பா தலைமையில் பா.ஜனதா நிர்வாகிகள் பெங்களூருவில் நேற்று ஆலோசனை நடத்தினர்.

Update: 2018-12-24 23:35 GMT
பெங்களூரு,

கர்நாடக மந்திரிசபை விரிவாக்கம் நடைபெற்றது. இதில் புதிதாக 8 மந்திரிகள் பதவி ஏற்றனர். மந்திரி பதவியில் இருந்து நீக்கப்பட்ட ரமேஷ் ஜார்கிகோளி, எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

மேலும் மந்திரி பதவி கிடைக்காததால் ராமலிங்கரெட்டி உள்பட சில காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். அவர்களை வளைத்து தங்கள் கட்சிக்கு இழுக்க பா.ஜனதா முயற்சியில் இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த பணியை அக்கட்சி மிக ரகசியமாக செய்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் இதுகுறித்து ஆலோசிக்க பா.ஜனதா நிர்வாகிகள் கூட்டம் பெங்களூரு மல்லேசுவரத்தில் உள்ள அக்கட்சியின் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதற்கு மாநில பா.ஜனதா தலைவர் எடியூரப்பா தலைமை தாங்கினார். இதில் மத்திய மந்திரி சதானந்தகவுடா, ஷோபா எம்.பி. உள்பட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதில் காங்கிரசில் அதிருப்தியில் உள்ள எம்.எல்.ஏ.க்களை இழுப்பது குறித்து ஆலோசித்ததாக கூறப்படுகிறது. மேலும் சதானந்தகவுடா பேசுகையில், சட்டமன்ற தேர்தலில் பெங்களூருவில் பா.ஜனதா குறைந்த எண்ணிக்கையிலான தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றதாகவும், இதற்கு ெபங்களூரூ நிர்வாகிகளே காரணம் என்றும் குறிப்பிட்டு பேசினார்.

மேலும் செய்திகள்