மகளிர் சுயஉதவி குழுவினரின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் குறைதீர் நாள் கூட்டத்தில் மனு

மகளிர் சுயஉதவி குழுவினரின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று குறைதீர்நாள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

Update: 2018-12-24 23:08 GMT
புதுக்கோட்டை,

புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் கணேஷ் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார். அப்போது விலையில்லா வீட்டுமனை பட்டா, பட்டா மாறுதல், வேலைவாய்ப்பு, நிவாரண தொகை உள்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 253 மனுக்கள் பெறப்பட்டன. கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி ராமசாமி உள்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கந்தர்வகோட்டை தாலுகா நெப்புகை உரியம்பட்டியை சேர்ந்த மகளிர் சுயஉதவி குழுவினர் கொடுத்த மனுவில், நாங்கள் புதுவாழ்வு திட்டத்தின் கீழ் மற்றும் நபார்டு வங்கியிலும் கடன் பெற்று உள்ளோம். இந்நிலையில் கஜா புயலால் எங்கள் பகுதியில் உள்ள வீடுகள், விவசாய பயிர்கள் போன்றவை சேதமடைந்துள்ளன. இதனால் நாங்கள் வாங்கிய கடனை செலுத்த முடியாமல் அவதிப்பட்டு வருகிறோம். எனவே நாங்கள் புதுவாழ்வு திட்டத்தின் கீழ் மற்றும் நபார்டு வங்கியில் வாங்கிய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என கூறியிருந்தனர்.

ஆலங்குடி தாலுகா கொத்தமங்கலம் பகுதியை சேர்ந்த சுயஉதவிக்குழு பெண்கள் கொடுத்த மனுவில், நாங்கள் கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளோம். இந்நிலையில் நாங்கள் மனு அளித்ததை தொடர்ந்து நாங்கள் வாங்கிய தனியார் நிதி நிறுவன கடன்களை செலுத்த 6 மாத காலஅவகாசம் அளித்து நீங்கள் உத்தரவிட்டீர்கள். ஆனால் தொடர்ந்து தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் கடன்தொகை கேட்டு வீட்டிற்கு வருகின்றனர். அவர்களிடம் கலெக்டர் 6 மாத காலஅவகாசம் அளித்து உள்ளார் என கூறினால், காலஅவகாசம் வழங்கிய கடிதத்தை வாங்கி வாருங்கள் என்று கூறுகின்றனர். எனவே கலெக்டர் நாங்கள் வாங்கிய தனியார் நிதி நிறுவன கடன்களை தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தனர்.

இதேபோல மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மகளிர் சுயஉதவிக்குழுவினர் தாங்கள் நிதி நிறுவனத்தில் வாங்கிய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் அல்லது கடன்தொகையை கட்ட 6 மாத காலஅவகாசம் வழங்க வேண்டும் என கூறியிருந்தனர். தமிழக அரசின் 27 வகையான நிவாரண பொருட்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெரும்பாலான பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. கார்த்திக்தொண்டைமான் கொடுத்த மனுவில், புதுக்கோட்டை மச்சுவாடியில் 1972-ம் ஆண்டு தொடங்கப்பட்ட முன்மாதிரி மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் உள்ள மாணவர்கள் பயன்பெறும் வகையில் சேதம் அடைந்துள்ள விடுதி கட்டிடத்தை சீரமைத்து மாணவர்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் எனகூறியிருந்தார். மனுவை கொடுத்து விட்டு வெளியே வந்த கார்த்திக்தொண்டைமானிடம் அந்த பகுதியில் நின்ற பெண்கள் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவின் நகலை கொடுத்து, தங்கள் மனு மீது நடவடிக்கை எடுக்க நீங்கள் வலியுறுத்த வேண்டும் என கூறினார். பின்னர் அவர் பெண்கள் கொடுத்த மனுக்களை பெற்று கொண்டு, நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவதாக கூறிவிட்டு சென்றார்.

மேலும் செய்திகள்