சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு மனைவி, 2 குழந்தைகளுடன் தீக்குளிக்க முயன்ற தொழிலாளி நிலத்தை விற்க விடாமல் உறவினர்கள் தடுப்பதாக புகார்
நிலத்தை விற்க விடாமல் உறவினர்கள் தடுப்பதாக கூறி சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு மனைவி, 2 குழந்தைகளுடன் தீக்குளிக்க முயன்ற தொழிலாளியால் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம்,
சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. அப்போது சேலம் மாவட்டம் தேக்கம்பட்டி அருகே உள்ள காந்திநகர் பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி தங்கராசு (வயது 45), தனது மனைவி வீரம்மாள், மகன் கார்க்கி, மகள் காந்தவர்ஷினி ஆகியோருடன் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் கலெக்டர் அலுவலகத்துக்குள் மனு கொடுக்க செல்பவர்களிடம் சோதனை நடத்தி கொண்டிருந்தனர்.
இதை பார்த்த தங்கராசு நுழைவு வாசலுக்கு வந்ததும் திடீரென பாட்டிலில் வைத்திருந்த மண்எண்ணெயை எடுத்து தனது உடலிலும், மனைவி, குழந்தைகள் மீதும் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதை பார்த்த போலீசார் ஓடி சென்று அவர்களை தீக்குளிக்க விடாமல் தடுத்து நிறுத்தினர். பின்னர் அவர்கள் மீது தண்ணீரை ஊற்றினர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் தங்கராசுவிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் போலீசாரிடம் கூறும்போது, ‘நான், எனக்கு தெரிந்த சில நபர்களிடம் ரூ.5 லட்சம் வரை கடன் வாங்கி உள்ளேன். இந்த கடனை அடைப்பதற்காக எனக்கு சொந்தமான நிலத்தை விற்பனை செய்ய முடிவு செய்தேன். ஆனால் இந்த நிலத்தை விற்பனை செய்யவிடாமல் உறவினர்கள் சிலர் தடுத்து வருகின்றனர். இதுதொடர்பாக போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் மனவேதனை அடைந்த நான், குடும்பத்துடன் தீக்குளித்து தற்கொலை செய்யும் நோக்கத்தில் இங்கு வந்தேன்‘ என்று கூறினார்.
அவரிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.