சேலத்தில் நள்ளிரவில் பரபரப்பு: 2 மோட்டார்சைக்கிள்கள்- 4 மொபட்டுகளுக்கு தீ வைப்பு மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
சேலத்தில் நள்ளிரவில் 2 மோட்டார் சைக்கிள்கள், 4 மொபட்டுகளுக்கு தீ வைக்கப்பட்டது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி தீ வைத்த மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
சேலம்,
இந்த பரபரப்பு சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
சேலம் கோட்டை பெருமாள் கோவில் அருகே உள்ள சின்னசாமி தெரு பகுதியை சேர்ந்தவர் கவுஸ் மொய்தீன். இவர் நேற்று முன்தினம் இரவு மோட்டார் சைக்கிளை தனது வீட்டு முன்பு நிறுத்தி விட்டு தூங்கிக்கொண்டிருந்தார். நள்ளிரவில் கண்விழித்தபோது ஜன்னல் வழியாக கரும்புகை வருவதை பார்த்து திடுக்கிட்டார். பின்னர் அவர் கதவை திறந்து வெளியில் வந்தார். அப்போது அங்கு நிறுத்தப்பட்டு இருந்த அவரது மோட்டார் சைக்கிள் தீப்பிடித்து எரிந்து கொண்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தார். இருப்பினும் மோட்டார் சைக்கிள் எரிந்து நாசம் ஆனது.
இவரது வீட்டிற்கு சற்று தொலைவில் வசிப்பவர்கள் அப்துல்காதர், சகீர்அகமத், ரகமத்துல்லா, ஷானவாஸ், முபாரக் ஆகியோர் வீட்டு முன்பு நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிள், மொபட்டுகளும் எரிந்து கொண்டு இருந்தது. இதை பார்த்த அவர் சத்தம் போட்டார்.
இதைத்தொடர்ந்து அவர்களும் வீட்டில் இருந்து வெளியில் வந்து பார்த்தனர். பின்னர் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். இருப்பினும் மோட்டார் சைக்கிள், மொபட்டுகள் எரிந்து நாசமானது. இவ்வாறு 2 மோட்டார்சைக்கிள்கள், 4 மொபட்டுகள் எரிந்தன.
மேலும் அதே பகுதியை சேர்ந்த ரிச்சன் என்பவரது சைக்கிளும் தீயில் எரிந்தது.
இதுகுறித்து அவர்கள் சேலம் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதில், எங்களது மோட்டார் சைக்கிள்களுக்கு மர்ம நபர்கள் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து சென்று விட்டனர். எனவே அவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும், என குறிப்பிட்டு இருந்தனர்.
இதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். பின்னர் அந்த பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை ஆய்வு செய்து மோட்டார் சைக்கிள்கள், மொபட்டுகளுக்கு தீ வைத்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். நள்ளிரவில் நடந்த இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.