நெல்லையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: கலெக்டர் அலுவலகத்தை காலிக்குடங்களுடன் பெண்கள் முற்றுகை குடிநீர் சீராக வழங்க கோரிக்கை
குடிநீர் சீராக வழங்கவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் காலிக்குடங்களுடன் பெண்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல்லை,
நெல்லை கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் நேற்று மக்கள் குறைதீர்க்கும்நாள் கூட்டம் நடந்தது. கலெக்டர் ஷில்பா தலைமை தாங்கி பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை வாங்கினார். கூட்டத்தில் ஏராளமான பெண்கள் இலவச வீட்டு மனைபட்டா மற்றும் ஸ்கூட்டர் கேட்டும், முதியவர்கள் முதியோர் உதவித்தொகை கேட்டும் மனு கொடுத்தனர்.
ஆலங்குளம் அருகே உள்ள குத்தப்பாஞ்சான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட கிராமத்தை சேர்ந்த பெண்கள் காலிக்குடங்களுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். தங்கள் ஊருக்கு குடிநீர் சீராக வழங்க வேண்டும் என்று கோரிக்கையை வலியுறுத்தி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து அவர்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அதில், “எங்கள் பகுதியில் சிலர் சட்டவிரோதமாக மோட்டார் மூலம் குடிநீரை உறிஞ்சுவதால் குடிநீர் வினியோகம் பாதிக்கப்படுகிறது. எங்கள் ஊருக்கு குடிநீர் சீராக கிடைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும் சட்டவிரோதமாக மோட்டார் வைத்து குடிநீர் உறிஞ்சுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்“ என்று கூறி உள்ளனர்.
விக்கிரமசிங்கபுரம் அருகே உள்ள கோட்டைவிளைப்பட்டியை சேர்ந்தவர்கள் கொடுத்த மனுவில், “எங்கள் சமுதாயத்திற்கு சொந்தமான சுடுகாட்டு பகுதியை தனியார் சிலர் ஆக்கிரமித்துள்ளனர். அந்த ஆக்கிரமிப்பை அகற்றி தரவேண்டும்“ என்று கூறி உள்ளனர்.
பார்வர்டு பிளாக் ஆட்டோ தொழிலாளர் நலச்சங்கத்தினர் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், பாளையங்கோட்டையில் புதிதாக கட்டிமுடிக்கப்பட்டுள்ள பல்நோக்கு மருத்துவமனை முன்பு ஆட்டோ நிறுத்த இடவசதி செய்து தரவேண்டும் என்று கூறி உள்ளனர்.
திருவேங்கடம் அருகே உள்ள வீராணம் கிராம மக்கள் தங்களுக்கு பஸ்வசதி கேட்டு மனு கொடுத்தனர். பாளையங்கோட்டையில் உள்ள தமிழ் வளர்ச்சி பண்பாட்டு மையத்திற்கு நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் நியமிக்கவேண்டும் என்று தமிழ் ஆர்வலர்கள் மனு கொடுத்தனர்.
கூட்டத்தில் பாளையங்கோட்டை தாலுகாவை சேர்ந்த 15 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டாவும், ஒருவருக்கு நிதி உதவியும் வழங்கப்பட்டது. இந்த நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஷில்பா வழங்கினார்.