தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கிராமமக்கள் கலெக்டரிடம் மனு குழந்தைகளுடன் வந்ததால் பரபரப்பு

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக குழந்தைகளுடன் வந்து கிராமமக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2018-12-24 23:00 GMT
தூத்துக்குடி, 

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக அகற்றக் கோரி பல்வேறு தரப்பினர் கலெக்டரிடம் மனு கொடுத்து வருகின்றனர். அதன்படி, தூத்துக்குடி ஸ்டெர்லைட்டுக்கு எதிரான தமிழர்கள் கூட்டமைப்பு சார்பில் குழந்தைகளுடன் கிராமமக்கள் நேற்று காலை கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள் கோரிக்கை அட்டைகளை ஏந்தி பிடித்தபடி ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். வேல்ராஜ், தமிழ்மாந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதேபோன்று பெரியநாயகிபுரத்தை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் குழந்தைகளுடன் தேசிய கொடியை ஏந்தியபடி வந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். தமிழ்புலிகள் அமைப்பினரும் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பின்னர் அவர்கள் தனித்தனியே கோரிக்கை மனுக்களை கலெக்டர் சந்தீப் நந்தூரியிடம் கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறி இருப்பதாவது:-

எங்களின் தலைமுறைகளும், வளங்களும் நீடித்து வாழ தகுதியுள்ள நகரமாக தூத்துக்குடி இருக்க வேண்டும். இதற்காக ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக இந்த மண்ணை விட்டு அகற்ற சட்டமன்றத்தை கூட்டி சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும். தூத்துக்குடி மக்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும். தமிழக அரசு ஸ்டெர்லைட்டால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை ஆய்வுகளின் அடிப்படையிலும், ஆவணங்களின் மூலம் கிடைக்கப்பட்ட தகவல்கள் அடிப்படையிலும் ஆதாரங்களை தயார் செய்து தமிழக மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஒப்புதல் பெற்று வலுவான மற்றொரு அரசாணை வெளியிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறி உள்ளனர்.

குழந்தைகளுடன் பொதுமக்கள் மனு கொடுக்க வந்ததால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

மேலும் செய்திகள்