வேலூரில், முன்னாள் துணைவேந்தர் க.ப.அறவாணன் நூல்களை அரசுடைமையாக்க வேண்டும் திருமாவளவன் பேட்டி

முன்னாள் துணை வேந்தர் க.ப.அறவாணன் நூல்களை அரசுடைமையாக்க வேண்டும் என்று வேலூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறினார்.

Update: 2018-12-24 23:00 GMT

வேலூர்,

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நேற்று வேலூரில் நிருபர்களிடம் கூறியதாவது:–

குட்கா விவகாரத்தில் உயர் நீதிமன்ற வழிகாட்டுதல்களின் அடிப்படையில் தமிழக அரசு சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.

தமிழகத்தில் மதுக்கடைகளை மூட வேண்டும் என்பது பல கட்சிகளின் நீண்டநாள் கோரிக்கையாகும். ஆனால் ஆட்சியாளர்கள் தொடர்ந்து மதுக்கடைகளையும், சொகுசு பார்களையும் திறந்து வருகிறார்கள். மேலும் இலக்கு வைத்து வியாபாரத்தை பெருக்குவது என்று அடித்தட்டு மக்களை குறிவைத்து செயல்படுவது அதிர்ச்சி அளிக்கிறது.

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரும், எழுத்தாளருமான க.ப.அறவாணன் மறைவு தமிழ்கூறும் நல்உலகிற்கு பேரிழப்பாகும். க.ப.அறவாணனின் வரலாற்று ஆய்வுசார்ந்த நூல்கள் அனைத்தையும் அரசுடைமையாக்க வேண்டும். கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்திந்து ஆறுதல் சொல்ல பிரதமர் மோடிக்கு நேரமில்லை. ஆனால் கார்ப்பரேட் நிறுவனங்களின் கூட்டம், நடிகையின் திருமணத்தில் கலந்து கொள்ள அவருக்கு நேரம் உள்ளது.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவித்ததை விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆதரிக்கிறது. கூட்டணி கட்சிகளிடையே ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக நிறுத்துவது தொடர்பாக எந்த குழப்பமும் இல்லை.

மத்திய அரசு கணினி அமைப்புகளை உளவு பார்க்க அனுமதி வழங்கியதில் நாகரீகம் எதுவும் இருக்க முடியாது. இச்செயல் தனிநபர் சுதந்திரத்தை பாதிக்கக்கூடியது. எதிர்கட்சிகளை பழிவாங்க இது வழிவகுக்கும். இதனை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும்.

சாதிரீதியாக வசைபாடும் அநாகரீகமான போக்கு கண்டிக்கத்தக்கது. சிலர் வேண்டுமென்றே சமூக நல்லிணக்கத்தை சிதைக்க இத்தகைய செயல்களில் ஈடுபடுகிறார்கள். அதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மீது சிலர் பழி சுமத்துகின்றனர். தமிழகத்தில் கண்டிப்பாக பா.ஜனதா வலுவாகும். தாமரை மலரும் என்று தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பேசுவது அவருடைய விருப்பம், கனவு. ஆனால் அவை தமிழகத்தில் நிறைவேறாது. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்