ரூ.6 கோடி ஐம்பொன் சிலையை கடத்தி விற்க முயற்சி: கைதான இரும்பு பட்டறை உரிமையாளருக்கு 4-ந் தேதி வரை காவல் - நீதிபதி உத்தரவு

ரூ.6 கோடி மதிப்புள்ள சிலையை கடத்தி விற்பனை செய்ய முயன்ற இரும்பு பட்டறை உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-12-23 23:12 GMT
கும்பகோணம்,

ரூ.6 கோடி மதிப்புள்ள சிலையை கடத்தி விற்பனை செய்ய முயன்ற இரும்பு பட்டறை உரிமையாளரை போலீசார் சென்னையில் கைது செய்தனர். அவருக்கு வருகிற 4-ந் தேதி வரை காவலில் வைக்க கும்பகோணம் கோர்ட்டு நீதிபதி உத்தரவிட்டார்.

சென்னை அரக்கோணம் அருகே நெமிலி பகுதியில் உள்ள கோவிலில் இருந்து பழமையான முருகன் சிலை ஒன்று கடந்த 2½ ஆண்டுகளுக்கு முன்பு கடத்தப்பட்டது. இதுதொடர்பாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் சென்னை கிண்டி பகுதியில் உள்ள ஒரு இரும்பு பட்டறையில் ரூ.6 கோடி மதிப்புள்ள பழமையான முருகன் சிலையை சிலர் விற்பனைக் காக வைத்திருப்பதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அந்த இரும்பு பட்டறைக்கு சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது அங்கிருந்து 3 கிலோ எடை கொண்ட ரூ.6 கோடி மதிப்புள்ள பழமையான ஐம்பொன் முருகன் சிலை மீட்கப்பட்டது. இந்த சிலை நெமிலி பகுதியில் உள்ள கோவிலில் இருந்து கடத்தப்பட்டு, விற்க முயற்சி நடந்ததும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் இரும்பு பட்டறை உரிமையாளர் அனகாபுத்தூரை சேர்ந்த சிவக்குமார் என்பவரை கைது செய்தனர். இவரை கும்பகோணத்தில் உள்ள கூடுதல் குற்றவியல் கோர்ட்டு நீதிபதி அய்யப்பன்பிள்ளை வீட்டில் போலீசார் நேற்று ஆஜர்படுத்தினர். அப்போது நீதிபதி, வருகிற 4-ந் தேதி வரை சிவக்குமாரை காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து சிவக்குமாருக்கு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பின்னர் அவர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும் செய்திகள்