ஷீரடி சாய்பாபா கோவிலுக்கு பாதயாத்திரை சென்ற பக்தர்கள் கூட்டத்தில் கார் புகுந்து 3 பேர் பலி 16 பேர் காயம்
ஷீரடி சாய்பாபா கோவிலுக்கு பாதயாத்திரை சென்ற பக்தர்கள் கூட்டத்தில் கார் புகுந்து 3 பேர் பலியாகினர். 16 பேர் காயமடைந்தனர்.
மும்பை,
ஷீரடி சாய்பாபா கோவிலுக்கு பாதயாத்திரை சென்ற பக்தர்கள் கூட்டத்தில் கார் புகுந்து 3 பேர் பலியாகினர். 16 பேர் காயமடைந்தனர்.
கார் புகுந்து விபத்து
அகமது நகர் மாவட்டத்தில் உள்ள ஷீரடி சாய்பாபா கோவிலுக்கு மும்பை காந்திவிலி பகுதியை சேர்ந்த 300 பக்தர்கள் பாத யாத்திரையாக சென்றனர். இவர்கள் நேற்று முன்தினம் இரவு 8 மணி அளவில் நாசிக்கை அடுத்த ஷீரடி-சின்னார் சாலையில் சாவடி கிராமம் அருகே சென்று கொண்டு இருந்தனர். அப்போது பின்னால் இருந்து வேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து பக்தர்களின் கூட்டத்தில் புகுந்தது.
இந்த விபத்தில் 19 பக்தர்கள் தூக்கி வீசப்பட்டு காயமடைந்தனர். இந்த விபத்தை கண்ட அந்த வழியாக சென்றவர்கள், காயத்துடன் உயிருக்கு போராடியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
3 பக்தர்கள் பலி
தகவல் அறிந்த போலீசாரும் விரைந்து வந்தனர். அவர்கள் காயமடைந்தவர்களை ஆம்புலன்ஸ் வேன்களில் ஏற்றி அருகே உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே அவினாஷ் பவார் (வயது30), அனிகேத் மாத்ரே (18) உள்பட 3 பக்தர்கள் பரிதாபமாக இறந்தனர்.
காயம் அடைந்த 16 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.