‘5 மாநில சட்டசபை தேர்தல் தோல்விக்கு பா.ஜனதா தலைமைதான் பொறுப்பு’ மத்திய மந்திரி நிதின் கட்காரி கருத்தால் சர்ச்சை
5 மாநில சட்டசபை தேர்தல் தோல்விக்கு பா.ஜனதா கட்சி தலைமைதான் பொறுப்பேற்க வேண்டும் என்று மத்திய மந்திரி நிதின் கட்காரி கூறியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
புனே,
5 மாநில சட்டசபை தேர்தல் தோல்விக்கு பா.ஜனதா கட்சி தலைமைதான் பொறுப்பேற்க வேண்டும் என்று மத்திய மந்திரி நிதின் கட்காரி கூறியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
5 மாநில சட்டசபை தேர்தல்
அடுத்த ஆண்டு நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடக்க உள்ளது.
இந்த நிலையில், தெலுங்கானா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஷ்கார், மிசோரம் ஆகிய 5 மாநில சட்டசபை தேர்தல் நடந்தது. இது நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கு முன்னோடியாக அமையும் என்று கூறப்பட்டது.
இந்த தேர்தலில் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஷ்கார் ஆகிய இந்தி பேசும் மாநிலங்களில் பாரதீய ஜனதா கட்சி தோல்வி அடைந்து, ஆட்சியை பறிகொடுத்துள்ளது.
இது அந்தக் கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.
நிதின் கட்காரி கருத்து
இந்த நிலையில், பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை மந்திரியுமான நிதின் கட்காரி, மராட்டிய மாநிலம், புனேயில் மாவட்ட நகர கூட்டுறவு வங்கிகள் சங்கம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினார்.
அப்போது அவர், ‘‘தேர்தலில் வெற்றி பெற்றால், அதற்கு உரிமை கோர நிறைய பேர் வருவார்கள். அதற்கு பலத்த போட்டியே நிலவும். வெற்றிக்கு நான் தான் காரணம் எனக்கூறிக்கொள்ள நிறைய பேர் முளைப்பார்கள். ஆனால் தோல்வி ஏற்பட்டால் யாரும் பொறுப்பு ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். தோல்வி என்பது ஆதரவற்ற பிள்ளையாகவே நிற்கும். தோல்விக்கு அவர் தான் காரணம் என்று ஒருவரை ஒருவர் கையை நீட்டி அடையாளம் காட்ட தொடங்கி விடுவர். வெற்றிக்கு சொந்தம் கொண்டாடுவதுபோல, தோல்விக்கும் தலைமை தான் பொறுப்பு ஏற்றுக்கொள்ள வேண்டும்’’ என குறிப்பிட்டார்.
இந்தப் பேச்சு பெருத்த சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
டுவிட்டரில் விளக்கம்
இது தொடர்பாக நிதின் கட்காரி நேற்று டுவிட்டரில் விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-
எனது பேச்சு திரித்துக் கூறப்பட்டு உள்ளது. கடந்த சில நாட்களாகவே சில எதிர்க்கட்சிகளும், ஊடகவியலாளர்களில் ஒரு பிரிவினரும் எனது கட்சிக்கும், எனக்கும் அவமதிப்பு ஏற்படுத்தும் நோக்கத்தில் எனது கருத்துக்களை திசை திருப்பி, தவறான பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதை காண முடிகிறது.
எனக்கும் பாரதீய ஜனதா கட்சியின் தலைமைக்கும் இடையே ஒரு பிளவை ஏற்படுத்த சதி நடக்கிறது. நான் மீண்டும், மீண்டும் அந்த அவதூறுகளை உறுதியாக மறுத்து வந்திருக்கிறேன். இப்போது எனது கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.
எனக்கும், கட்சி தலைமைக்கும் இடையே பிளவு ஏற்படுத்த நினைத்து மேற்கொள்கிற சதிகள் ஒருபோதும் வெற்றி பெறப்போவதில்லை என்பதை தெளிவாக சொல்லிக்கொள்கிறேன்.
நான் என் நிலையை பல்வேறு தருணங்களில், இடங்களில் வெளிப்படுத்தி உள்ளேன். அதைத் தொடர்வேன். எதிரிகளின் மோசமான செயல்களை தொடர்ந்து அம்பலப்படுத்துவேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.