திண்டுக்கல் அருகே குளத்தில் மூழ்கி அக்காள்-தங்கை பலி - துணி துவைக்க சென்றபோது பரிதாபம்

திண்டுக்கல் அருகே துணி துவைக்க சென்றபோது குளத்தில் மூழ்கி அக்காள்-தங்கை பரிதாபமாக இறந்தனர்.

Update: 2018-12-23 22:00 GMT
கோபால்பட்டி, 

திண்டுக்கல் அருகே உள்ள சாணார்பட்டியை அடுத்த கே.குரும்பபட்டியை சேர்ந்தவர் அழகர்சாமி (வயது 42). விவசாயி. இவருக்கு நீலாவதி (17), அன்பரசி (16), பிரியதர்ஷினி (14), ஜெசிந்தாபாண்டி (11) ஆகிய 4 மகள்கள் இருந்தனர். இதில் நீலாவதி, அன்பரசி ஆகியோர் மதுரையில் உள்ள ஒரு பள்ளி விடுதியில் தங்கியிருந்து படித்து வருகின்றனர்.

பிரியதர்ஷினி, ஜெசிந்தாபாண்டி ஆகியோர் திண்டுக்கல் அண்ணாமலையார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 9 மற்றும் 6-ம் வகுப்பு படித்து வந்தனர். இவர்கள் 2 பேரையும், தந்தை அழகர்சாமி நேற்று மாலை அங்குள்ள கல்லோடை குளத்துக்கு துணி துவைப்பதற்காக அழைத்து சென்றார். மாணவிகளை துணி துவைக்குமாறு கூறிவிட்டு, அழகர்சாமி அருகே உள்ள தோட்டத்துக்கு சென்றார்.

இதற்கிடையே, அவர்கள் துணிகளை துவைத்துவிட்டு குளிப்பதற்காக இருவரும் குளத்துக்குள் இறங்கி உள்ளனர். அப்போது, ஆழமான பகுதிக்குள் சென்றதால் மாணவிகள் நீரில் தத்தளித்துள்ளனர். ஆனால் நீச்சல் தெரியாததால் 2 பேரும் குளத்தில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர். சிறிது நேரம் கழித்து அங்கு வந்த அழகர்சாமி, தனது மகள்கள் காணாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் உதவியுடன் குளத்தில் இறங்கி அழகர்சாமி தேடினார். அப்போது, 2 பேரும் பிணமாக மீட்கப்பட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த சாணார்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் 2 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பலியான மாணவிகளின் உடல்களை பார்த்து உறவினர்கள் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.

மேலும் செய்திகள்