அரையாண்டு தேர்வு விடுமுறை எதிரொலி கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்
அரையாண்டு தேர்வு விடுமுறையையொட்டி கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
கொடைக்கானல்,
‘மலைகளின் இளவரசி‘ என்று வர்ணிக்கப்படும் கொடைக்கானலில் ஆண்டுதோறும் நிலவும் குளு, குளு சீசனை அனுபவிக்க தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருவர். குறிப்பாக விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதும்.
அதன்படி தற்போது தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி சனி, ஞாயிறு விடுமுறை என்பதாலும் நேற்று சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருந்தது. குறிப்பாக கேரளா, கர்நாடகம், ஆந்திரா போன்ற மாநிலங்களில் இருந்து அதிகளவில் சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர்.
காலையில் இருந்தே கார், வேன், பஸ் உள்ளிட்ட வாகனங்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்ததால் நகரின் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போதிய போலீசார் இல்லாத காரணத்தால் வாகன ஓட்டிகளே போக்குவரத்தை சீரமைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.
சுற்றுலா பயணிகள் கொடைக்கானலில் குவிந்ததால் அங்குள்ள தங்கும் விடுதிகள் நிரம்பி வழிந்தன. மேலும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக ஏராளமானோர் கொடைக்கானலில் முகாமிட்டுள்ளனர். இதனால் சுற்றுலா தொழிலை நம்பியுள்ள பல்வேறு தரப்பினரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதனிடையே சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் வானில் வர்ண ஜாலங்கள் நிகழ்ந்தன. மலை முகடுகளை முத்தமிட்டப்படி மேககூட்டங்கள் அவ்வப்போது தரையிறங்கி சுற்றுலா பயணிகளை பிரமிக்க வைத்தன. பகல் நேரத்தில் சாரல் மழை பெய்தது. அதில் நனைந்தபடியே சுற்றுலா இடங்களை பார்த்து ரசித்தனர்.
சுற்றுலா பயணிகளின் வருகை காரணமாக சுற்றுலா இடங்கள் களை கட்டின. குறிப்பாக கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்து சுற்றுலா பயணிகள் மகிழ்ந்தனர். பிரையண்ட் பூங்கா, பில்லர்ராக், குணாகுகை, மோயர் பாயிண்ட் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் களை கட்டியது.
மேலும் சைக்கிள் சவாரி, குதிரை சவாரி செய்வதிலும் சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டினர். சுற்றுலா பயணிகள் அதிகரித்துள்ளதால் புத்தாண்டு முடியும் வரை கொடைக்கானலில் கூடுதல் போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும் என அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.