நெல்லை சந்திப்பில் ரெயிலில் கேரளாவுக்கு கடத்த முயன்ற 1½ டன் ரேஷன் அரிசி சிக்கியது பழப்பெட்டிகளில் பதுக்கி இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்
நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் இருந்து ரெயில் மூலம் கேரளாவுக்கு பழப்பெட்டிகளில் பதுக்கி கடத்த முயன்ற 1½ டன் ரேஷன் அரிசி சிக்கியது.
நெல்லை,
நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் இருந்து ரெயில் மூலம் கேரளாவுக்கு பழப்பெட்டிகளில் பதுக்கி கடத்த முயன்ற 1½ டன் ரேஷன் அரிசி சிக்கியது.
பழப்பெட்டிகள்
நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் இருந்து கேரளா மார்க்கமாக பிலாஸ்பூருக்கு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1.15 மணிக்கு (அதாவது சனிக்கிழமை இரவு) எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி நேற்று முன்தினம் நள்ளிரவில் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் பிலாஸ்பூர் ரெயில் புறப்பட தயாராக நின்று கொண்டிருந்தது.
அப்போது அந்த ரெயிலில் சில பெண்கள் பழப்பெட்டிகளை ஏற்றிக் கொண்டிருந்தனர். ஒவ்வொரு இருக்கைக்கு அடியிலும் இந்த பெட்டிகளை மறைத்து வைத்தனர்.
ரேஷன் அரிசி
அந்த நேரத்தில் நெல்லை ரெயில்வே பாதுகாப்பு படை சப்-இன்ஸ்பெக்டர் ஞான ஆனந்த் தலைமையில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். போலீசாருக்கு பழப்பெட்டிகள் மீது சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அந்த பெட்டிகளை ஏற்றிக் கொண்டிருந்த பெண்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர்.
இதையடுத்து ஒரு பழப்பெட்டியை பிரித்து போலீசார் சோதனை செய்தனர். அப்போது அதில் மேல் பகுதியில் சப்போட்டா பழங்கள் இருந்தன. அதற்கு கீழே ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அனைத்து பெட்டிகளையும் பிரித்து பார்த்து 1½ டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
நூதன வழி
இது தொடர்பாக அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில், அவர்கள் நெல்லை அருகே உள்ள தாழையூத்து வெங்கடாசலபுரத்தை சேர்ந்த செல்லத்துரை மனைவி பழனியம்மாள் (வயது 47), கிருஷ்ணன் மனைவி லட்சுமி (50), கங்கைகொண்டானை சேர்ந்த வேலுமுத்து மனைவி பூலம்மாள் (35), பெருமாள் மனைவி உலகம்மாள் (35), பருத்திகுளத்தை சேர்ந்த முருகன் மனைவி சுப்பு (50) மற்றும் தாழையூத்தை சேர்ந்த முத்துப்பாண்டி மனைவி கருப்பம்மாள் (58) ஆகியோர் என்பது தெரியவந்தது.
இவர்கள் தாழையூத்து, கங்கைகொண்டான் பகுதிகளில் ரேஷன் அரிசியை கிலோ ரூ.1-க்கு வாங்கி, அதனை கேரளாவுக்கு கொண்டு சென்று ரூ.24-க்கு விற்பனை செய்து வந்துள்ளனர். சப்போட்டா பழம் வாசனை வீசும் என்பதால், ரேஷன் அரிசியை பெட்டிக்குள் அடியில் வெளியே தெரியாத வகையில் அடைத்து வைத்து அதன் மீது பழங்களை வைத்துள்ளனர். இதனால் யாருக்கும் சந்தேகம் ஏற்படாது என்று இந்த நூதன வழியை கையாண்டதாக அவர்கள் போலீசாரிடம் தெரிவித்தனர்.
6 பெண்கள் கைது
இதையடுத்து ரேஷன் அரிசி, பழங்கள் மற்றும் 6 பெண்களையும் ரெயில்வே பாதுகாப்பு படை சப்-இன்ஸ்பெக்டர் ஞான ஆனந்த் நெல்லை மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தார். அவர்கள் இது குறித்து வழக்குப்பதிவு செய்து 6 பெண்களையும் கைது செய்தனர். தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு சாலை மார்க்கமாக ரேஷன் அரிசி கடத்துவதற்கு போலீசார் நெருக்கடி கொடுத்து வருவதால் ரெயில் மூலம் நூதன கடத்திய கும்பல் போலீசாரிடம் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த கடத்தலுக்கு உடந்தையாக செயல்பட்டவர்கள் குறித்து உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.