இரும்பு தடுப்பில் மோட்டார் சைக்கிள் மோதி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பலி
கோவையில், இரும்பு தடுப்பில் மோட்டார் சைக்கிள் மோதி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பரிதாபமாக இறந்தார்.
பேரூர்,
கோவையை அடுத்த ஆலாந்துறை அருகே உள்ள புலுவபட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 57). இவர் செல்வபுரம் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். இவருக்கு நிர்மலா (50) என்ற மனைவியும், பொன்பூரணி, விநாயகி ஆகிய மகள்கள் மற்றும் திலகர் என்ற மகன் உள்ளனர். நேற்று மாலை ஆறுமுகம் பணியை முடிவித்து விட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பி சென்று கொண்டு இருந்தார்.
சிறுவாணி மெயின்ரோடு மாதம்பட்டி 4 சாலை சந்திப்பு பகுதியில் சென்றபோது அங்கு வைக்கப்பட்டு இருந்த இரும்பு தடுப்பு மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து ஆறுமுகம் தூக்கி வீசப்பட்டு சாலையில் விழுந்து படுகாயம் அடைந்தார்.
பின்னர் அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். ஆனால் அவர் செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து பேரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.