ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோவில்களில் ஆருத்ரா தரிசன விழா
ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோவில்களில் நேற்று ஆருத்ரா தரிசன விழா நடைபெற்றது.
ஈரோடு,
ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, சென்னிமலை, சத்தியமங்கலம், புஞ்சைபுளியம்பட்டி, கொடுமுடி கோவில்களில் நேற்று ஆருத்ரா தரிசன விழா நடந்தது.
சென்னிமலை நகரின் மையப்பகுதியில் உள்ள கைலாசநாதர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா சிறப்பாக நடைபெற்றது. நடராஜர், சிவகாமி அம்மனுக்கு பல்வேறு வகையான அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. வண்ண மலர் அலங்காரத்தில் இருந்த நடராஜருக்கும், சிவகாமி அம்மனுக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது. பிறகு ராஜ வீதிகள் வழியாக சாமி திருவீதி நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் விழாவில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதேபோல் சென்னிமலை சுற்றுவட்டாரத்தில் உள்ள அனைத்து வீடுகளிலும் நேற்று முன்தினம் இரவு மாங்கல்ய நோன்பு நடைபெற்றது.
அப்போது வீடுகளில் பூஜை நடத்தி மனைவியின் கழுத்தில் கணவன் புதிய தாலிக்கயிறு கட்டினர். அதன்பின்னர் பெற்றோர்கள், பெரியவர்கள் காலில் விழுந்து ஆசி பெற்றார்கள்.
சத்தியமங்கலத்தில் உள்ள பவானீஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசனத்தையொட்டி நடராஜர்-பார்வதி திருக்கல்யாணம் நடைபெற்றது. அதன்பின்னர் உற்சவ மூர்த்தி திருவீதி உலா நடைபெற்றது. வடக்குப்பேட்டையில் அமைக்கப்பட்டு இருந்த மேடையில் சாமி சப்பரம் வைக்கப்பட்டு பூஜை நடந்தது. திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தார்கள். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
கோபி பச்சை மலை மரகதீஸ்வரர் கோவிலில் நேற்று ஆருத்ரா தரிசன விழாவையொட்டி நடராஜர்-சிவகாமி அம்மனுக்கு பல்வேறு அபிஷேகங்கள் நடந்தது. அதைத்தொடர்ந்து சாமியும், அம்மனும் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்கள்.
இதேபோல் கோபி சிவன் கோவில், சாரதா மாரியம்மன் கோவில், பாரியூர் அமர பணீஸ்வரர் கோவில், காசிபாளையம் காசிவிஸ்வநாதர் கோவில், மொடச்சூர் ஈஸ்வரன் கோவிலிலும் ஆருத்ரா தரிசன விழா நடைபெற்றது.
கொடுமுடியில் உள்ள பிரசித்திபெற்ற மகுடேசுவரர் வீரநாராயண பெருமாள் கோவிலில் நேற்று ஆருத்ரா தரிசன விழா நடைபெற்றது. முன்னதாக நேற்று முன்தினம் இரவு சவுந்திரநாயகி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பிறகு கோவிலுக்கு வந்திருந்த சுமங்கலி பெண்களுக்கு தாலிக்கயிறு வழங்கப்பட்டது. அதன்பின்னர் பிச்சாடனார் திருவீதி உலா நடந்தது. பிறகு மகுடேசுவரர் உடனமர் சவுந்திரநாயகி ஊஞ்சல் உற்சவமும், சாமி திருவீதி உலாவும் நடந்தது.
நேற்று அதிகாலை 4.30 மணி அளவில் கோவிலில் தனி சன்னதி கொண்டுள்ள நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. அதன்பின்னர் கோவில் வளாகத்தில் தனி மேடை அமைக்கப்பட்டு, அதில் சிறப்பு அலங்காரத்துடன் நடராஜர் வைக்கப்பட்டார். தண்டபாணி குருக்கள் தலைமையில் அர்ச்சகர்கள் சாமி அலங்காரம் செய்திருந்தனர். ஏராளமான பக்தர்கள் அதிகாலை முதலே காத்திருந்து சாமி தரிசனம் செய்தார்கள். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
புஞ்சைபுளியம்பட்டியில் உள்ள அண்ணாமலையார் உண்ணாமலையம்மன் கோவிலில் நேற்று ஆருத்ரா தரிசனத்தை ஒட்டி அதிகாலை நடை திறக்கப்பட்டது. கோவிலில் தனி சன்னதி கொண்டுள்ள நடராஜருக்கு 4 மணிக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. அதிகாலையிலேயே கோவிலில் திரண்டு இருந்த பக்தர்கள் சாமி தரிசனம் செய்தார்கள். அதன்பின்னர் காலை 9 மணி அளவில் திருக்கைலாய வாத்தியத்துடன் நடராஜர் உடனமர் உண்ணாமலையம்மன் திருவீதி உலா நடைபெற்றது.