மோகனூர் அருகே கார் மீது லாரி மோதி அய்யப்ப பக்தர் பலி
மோகனூர் அருகே கார் மீது லாரி மோதிய விபத்தில் அய்யப்ப பக்தர் பரிதாபமாக உயிரிழந்தார்.
மோகனூர்,
நாமக்கல் மாவட்டம் மோகனூர் புதுத்தெருவை சேர்ந்தவர் மணிவேல். இவருடைய மகன் பாரதி (வயது 23). இவர், திருப்பூரில், உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் சிவில் என்ஜினீயராக வேலை செய்து வந்தார். அய்யப்ப பக்தர்களான மணிவேலும், பாரதியும் சபரிமலை செல்வதற்காக மாலை அணிந்திருந்தனர்.
இந்த நிலையில் மணிவேல், பரமத்திவேலூர் அருகே உள்ள பொத்தனூரில் இருந்து இருமுடி கட்டி சபரிமலை செல்ல இருந்தார். அவரை வழியனுப்பி வைப்பதற்காக நேற்று காலையில் பாரதி காரில் பொத்தனூர் நோக்கி சென்றார். பாலப்பட்டி அருகே சென்றபோது, எதிரே, மோகனூர் சர்க்கரை ஆலையில், கரும்பு சக்கை ஏற்றுவதற்காக வந்த லாரி எதிர்பாராதவிதமாக கார் மீது மோதியது.
இந்த விபத்தில் கார் அப்பளம் போல நொறுங்கியது. இதில் இடிபாடுகளுக்குள் சிக்கி பாரதி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த மோகனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக மணிவேல், மோகனூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.