ஊத்தங்கரை அருகே நாட்டுத்துப்பாக்கியுடன் 2 பேர் கைது
ஊத்தங்கரை அருகே நாட்டுத்துப்பாக்கியுடன் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஊத்தங்கரை,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேவன் மற்றும் போலீசார் ஊத்தங்கரை-திருவண்ணாமலை சாலையில் மாரம்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது போலீசாரை கண்டு 2 பேர் தப்பி ஓட முயன்றனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை விரட்டி பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள சந்திராவரம் வேடியப்பன் கோவில் பகுதியைச் சேர்ந்த அய்யாக்கண்ணு என்கிற சின்னசாமி (வயது 36), சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள திமிரிக்கோட்டையைச் சேர்ந்த ராஜாகண்ணு (43) என தெரிய வந்தது.
மேலும் அவர்கள் கையில் நாட்டுத்துப்பாக்கி ஒன்று இருந்ததும் தெரியவந்தது. அந்த துப்பாக்கி உரிமம் இல்லாத துப்பாக்கியாகும். அதன் மூலம் வன விலங்குகளை வேட்டையாட இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்து நாட்டுத்தப்பாக்கியை பறிமுதல் செய்தனர். பிறகு 2 பேரும் ஊத்தங்கரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ஊத்தங்கரை கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.