ராசிபுரம் அருகே சொகுசு பஸ் கவிழ்ந்து விபத்து மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் உறவினர்கள் உள்பட 11 பேர் காயம்
ராசிபுரம் அருகே சொகுசு பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் உறவினர்கள் உள்பட 11 பேர் காயம் அடைந்தனர்.
ராசிபுரம்,
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து நேற்று முன்தினம் இரவு தனியார் சொகுசு பஸ் ஒன்று கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பஸ்சை டிரைவர் ராஜூ என்பவர் ஓட்டி சென்றார். மூர்த்தி என்பவர் கிளனராக இருந்தார். பஸ்சில் 30 பயணிகள் பயணம் செய்தனர்.
நேற்று அதிகாலை 3 மணியளவில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே சேலம்- நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் மசக்காளிப்பட்டி அருகில் பஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த பகுதியில் மழை பெய்து கொண்டிருந்தது.
இந்த நிலையில் அந்த சொகுசு பஸ் திடீரென கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனின் சித்தப்பாவின் மருமகளான நாகர்கோவிலை சேர்ந்த அகிலாம்பிகை (வயது 42), இவருடைய மகள் நவுசிகா (18) மற்றும் ஆந்திராவை சேர்ந்த ராகுல் (42), சுதிரா (36), மாதவி (30), நவியாஸ்ரீ (7) உள்பட 11 பேர் காயம் அடைந்தனர்.
காயம் அடைந்தவர்களை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அகிலாம்பிகை, நவுசிகா ஆகியோர் சேலத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்த விபத்து தொடர்பாக ராசிபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.