கஜா புயலால் சாய்ந்த சவுக்கு மரங்களை வாங்க தமிழக அரசு சிறப்பு ஏற்பாடு

கஜா புயலால் சாய்ந்த சவுக்கு மரங்களை வாங்க தமிழக அரசு சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது.

Update: 2018-12-23 22:45 GMT
புதுக்கோட்டை,

தமிழகத்தை கஜா புயல் தாக்கியதில் புதுக்கோட்டை மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டது. லட்சக்கணக்கான மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன. அப்படி சாய்ந்த சவுக்கு மரங்களை வியாபாரிகள் குறைந்த விலைக்கு வாங்கி சென்றனர். இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், புயலால் சாய்ந்த சவுக்கு மரங்களை வாங்கி கொள்வதற்காக தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தின் சார்பில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி பெருங்களூர், கந்தர்வகோட்டை, ரெகுநாதபுரம், கறம்பக்குடி, ஆவணம் கைகாட்டி, வெட்டன்விடுதி, ஆலங்குடி, அரிமளம், குன்றாண்டார்கோவில் ஆகிய 9 இடங்களில் முகாம் அமைக்கப்பட்டு, விவசாயிகளிடம் இருந்து நேரடியாக சவுக்கு மரங்களை வாங்கி வருகின்றனர். 1 டன் சவுக்கு மரங்களை ரூ.5 ஆயிரத்து 575-க்கு தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவன அதிகாரிகள் வாங்கி சென்றனர்.

இதுகுறித்து மட்டையன்பட்டியை சேர்ந்த விவசாயி குமரேசன் கூறுகையில், கஜா புயலால் சாய்ந்த சவுக்கு மரங்களை வியாபாரிகள் குறைந்த விலைக்கு வாங்கி சென்றனர். எங்களுக்கு வேறு வழியில்லாததால் அவர்களிடம் மரங்களை குறைந்த விலைக்கு விற்று வந்தோம். தற்போது தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தின் சார்பில் சவுக்கு மரங்களை வாங்கி எந்திரங்களின் உதவியுடன் அவர்களாகவே வெட்டி கொள்கின்றனர். இது எங்களுக்கு சற்று ஆறுதலை தருகிறது என்றார்.

மேலும் செய்திகள்