தன்னிச்சையாக செயல்படும் கிரண்பெடி பதவி விலகக்கோரி 4-ந்தேதி நாடாளுமன்றம் முன் போராட்டம் - முதல்-மந்திரி நாராயணசாமி பேட்டி

புதுச்சேரி மாநிலத்தில் தொடர்ந்து தன்னிச்சையாக செயல்பட்டு வரும் கவர்னர் கிரண்பெடி பதவி விலகக்கோரி 4-ந்தேதி நாடாளுமன்றம் முன் போராட்டம் நடத்தப்படும் என்று முதல்-மந்திரி நாராயணசாமி கூறினார்.

Update: 2018-12-23 22:45 GMT
கோவை, 

புதுச்சேரி மாநிலத்தில் தொடர்ந்து தன்னிச்சையாக செயல்பட்டு வரும் கவர்னர் கிரண்பெடி பதவி விலகக்கோரி 4-ந்தேதி நாடாளுமன்றம் முன் போராட்டம் நடத்தப்படும் என்று முதல்-மந்திரி நாராயணசாமி கூறினார்.

இந்திய கலாசார நட்புறவு கழகத்தின் சார்பில் 3 நாள் தேசிய மாநாடு கோவை இந்துஸ்தான் கல்லூரியில் நடைபெறுகிறது. இந்த விழாவில் கலந்து கொள்ள கோவை வந்த புதுச்சேரி முதல்-மந்திரி நாராயணசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஷ்கர் மாநிலங்களில் ராகுல்காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சி மகத்தான வெற்றியை பெற்றுள் ளது. பாரதீய ஜனதா ஆட்சிக்கு வந்து 4½ ஆண்டுகள் ஆகியும் கொடுத்த வாக்குறுதிகள் ஒன்று கூட நிறைவேற்றப்படவில்லை.

வெளிநாடுகளில் பதுக்கி வைத்திருக்கும் கருப்பு பணம் இந்தியாவிற்கு கொண்டு வந்து, குடிமக்கள் ஒவ்வொருவரின் வங்கி கணக்கில் ரூ.15 லட்சம் போடப்படும் என்று பிரதமர் மோடி கூறினார். ஆண்டுக்கு 2 கோடி பேர் வீதம் 8 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு வழங்குவதாக கூறியவர் 35 லட்சம் பேருக்குதான் வேலை கொடுத்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் விவசாய விளை பொருட்களுக்கு இரட்டிப்பு விலை கொடுக்காமல் ஏமாற்றி வருகிறார். வெளிநாட்டு மூலதனம் இதுவரை வராமல், மோசமான தொழிற்கொள்கைகளால் தொழிற்கூடங்கள் மூடப்பட்டு வருகின்றன. பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் 167 பேர் பணத்தை மாற்ற சென்று இறந்துள்ளனர். அத்தியாவசிய பொருட்களுக்கு 28 சதவீத வரிவிதித்ததால் பல்வேறு தொழிற்சாலைகள் மூடப்பட்டு உள்ளன.

வரும் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகள் இணைந்து ஆட்சியை பிடிக்கும். காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் மந்திரிசபை கூடி ரபேல் விமானம் ஒன்றுக்கு ரூ.576 கோடி என்று ஒப்பந்தம் போடப்பட்டது. தற்போது ராணுவ மந்திரிக்கே தெரியாமல் ஒரு விமானம் ரூ.1670 கோடி என ரூ.30 ஆயிரம் கோடிக்கு, தனது நண்பர் அம்பானிக்காக பிரதமர் மோடி ஒப்பந்தம் செய்துள்ளார்.

இதற்கு நாடாளுமன்ற நிலைக் குழு வைத்து விசாரணை நடத்த வேண்டும் என காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்தும் இன்னும் அதனை செயல்படுத்தப்படவில்லை. ராகுல் காந்தி பிரதமராக வர வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன். யார் பிரதமராக வேண்டும் என்பதை மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.

புதுச்சேரியில் சட்டவிதிகளுக்கு உட்பட்டு நான் செயல்படுகிறேன். மாநில உரிமைகளில் துணை நிலை கவர்னர் கிரண்பெடி மீறுவதை கண்டித்து பதவி விலகக்கோரி வருகிற 4-ந் தேதி நாடாளுமன்றம் முன்பு 21 கூட்டணி தலைவர்கள் கலந்துகொள்ளும் போராட்டம் நடைபெற உள்ளது.துணை நிலை கவர்னர் செயல்பாடுகள் குறித்து, ஐகோர்ட்டு அறிவுறுத்தியும், அவர் தன்னிச்சையாக செயல்படுவது மோடிக்கு என் மேல் உள்ள பாசத்தை காட்டுகிறது. ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னர் ஊழல்வாதி என சுப்பிரமணியசாமி கூறி இருந்தால், அதனை அவர் பிரதமரிடம் சொல்லட்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்