வாலாஜாபாத் அருகே கார் மீது லாரி மோதி 3 பேர் பலி

வாலாஜாபாத் அருகே கார் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது. இதில் 2 பெண்கள் உள்பட 3 பேர் பலியானார்கள்.

Update: 2018-12-23 22:15 GMT
வாலாஜாபாத்,

காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத்தை அடுத்த நாயக்கன் குப்பம் பகுதியை சேர்ந்தவர் செந்தமிழ்ச்செல்வன். இவரது 3 மாத குழந்தை உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டது. இந்த செய்தியை அறிந்து குழந்தையின் இறுதி சடங்கில் கலந்து கொள்வதற்காக செந்தமிழ்ச்செல்வனின் பெரியப்பா குடும்பத்தினர் ஒரு குழந்தை, 4 பெண்கள் உள்பட 9 பேர் சென்னை போரூரில் இருந்து வாடகை காரில் நாயக்கன்குப்பத்திற்கு வந்து கொண்டிருந்தனர்.

வாலாஜாபாத்தை அடுத்த தென்னேரி-ஒரகடம் கூட்டுச் சாலை அருகே கார் வரும்போது வாலாஜாபாத்தில் இருந்து ஒரகடம் நோக்கி ஜல்லி ஏற்றிக்கொண்டு வேகமாக வந்த லாரி எதிர்பாராத விதமாக கார் மீது மோதியது. இதில் காரில் பயணம் செய்த 9 பேரும் படுகாயம் அடைந்தனர்.

விபத்து குறித்து அறிந்த வாலாஜாபாத் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் காரை ஓட்டி வந்த சென்னை பரணிபுத்தூரை சேர்ந்த டிரைவர் சக்திவேல் (வயது 24) சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி உயிரிழந்தார். போரூரை சேர்ந்த சித்ரா (38), ஜெகதாம்பாள் (58 ஆகியோரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தனர்.

மேலும் காரில் பயணம் செய்த வள்ளியப்பன் (38), நாகேந்திரன் (30), அஞ்சுகம் (26), விஜயலட்சுமி (38) மற்றும் ரபியா (3) ஆகியோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து காஞ்சீபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு பாலசுப்ரமணியன். வாலாஜாபாத் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். வேகமாக வந்து விபத்தினை ஏற்படுத்தி விட்டு தப்பி ஓடிய லாரி டிரைவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்