தக்கலையில் டி.டி.வி.தினகரன் வரவேற்பு பேனர்கள் அகற்றம் அதிகாரிகளுடன், கட்சியினர் வாக்குவாதம்

தக்கலையில் தினகரன் வரவேற்பு பேனர்களை அதிகாரிகள் அகற்றினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கட்சியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2018-12-23 23:00 GMT
தக்கலை, 

அருமனை கிறிஸ்துமஸ் விழாவில் கலந்து கொள்வதற்காக அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுசெயலாளர் டி.டி.வி. தினகரன் குமரி மாவட்டத்துக்கு வந்தார். அவரை வரவேற்பதற்காக குமரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வரவேற்பு பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன.

அதன்படி, தக்கலையில் பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம், மேட்டுக்கடை, மணலி போன்ற பகுதிகளில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள் வரவேற்பு பேனர்கள் வைத்திருந்தனர். இந்த நிலையில் நேற்று காலையில் பத்மநாபபுரம் நகராட்சி அதிகாரிகள் வரவேற்பு பேனர்கள் இருந்த பகுதிக்கு வந்தனர். பின்னர் பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள பேனர்களை அகற்றும்படி நகராட்சி ஊழியர்களுக்கு உத்தரவிட்டனர். உடனே பேனர்களை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் அங்கு திரண்டனர். அவர்கள் வரவேற்பு பேனர்களை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்தனர். அப்போது, கோர்ட்டு உத்தரவுபடி பேனர்களை அகற்றுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையடுத்து பேனர்களை தாங்களாவே முன்வந்து அகற்றுவதாக கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் கூறினர். அதனை ஏற்றுக்கொண்ட அதிகாரிகள், விரைவில் அகற்றுமாறு அறிவுறுத்தினர். தொடர்ந்து, கட்சியினர் பேனர்களை அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்