கிறிஸ்துமஸ் - புத்தாண்டையொட்டி மைசூரு அரண்மனை வளாகத்தில் மலர் கண்காட்சி தொடங்கியது
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டையொட்டி மைசூரு அரண்மனை வளாகத்தில் நேற்று மலர் கண்காட்சி தொடங்கியது.
மைசூரு,
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டையொட்டி மைசூரு அரண்மனை வளாகத்தில் நேற்று மலர் கண்காட்சி தொடங்கியது. இதில் பூக்களால் ஆன கஜபடை, மல்யுத்த வீரர்கள் அலங்காரம் பார்வையாளர்களை கவரும் வகையில் உள்ளது.
மைசூரு அரண்மனை வளாகத்தில்...
மைசூரு அரண்மனை வளாகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டையொட்டி அரண்மனை மண்டலி, மாவட்ட நிர்வாகம், மாவட்ட சுற்றுலாத் துறை ஆகியவை சார்பில் மாகீ (மார்கழி) உற்சவம் என்ற பெயரில் மலர் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது.
அதுபோல் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டையொட்டி 4-வது ஆண்டு மலர் கண்காட்சி டிசம்பர் 22-ந்தேதி தொடங்கி அடுத்த மாதம் (ஜனவரி)4-ந்தேதி வரை நடத்தப்படும் என்று கலெக்டர் அபிராம் ஜி.சங்கர் அறிவித்திருந்தார்.
மலர் கண்காட்சி தொடக்கம்
அதன்படி நேற்று மைசூரு அரண்மனை வளாகத்தில் மலர் கண்காட்சி தொடங்கியது. இதனை மாநில உயர்கல்வித் துறை மந்திரியும், மாவட்ட பொறுப்பு மந்திரியுமான ஜி.டி.தேவே கவுடா, சுற்றுலாத் துறை மந்திரி சா.ரா.மகேஷ் ஆகியோர் தொடங்கிவைத்தனர்.
இந்த கண்காட்சியில் சுமார் 4 லட்சம் பூச்செடிகள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக பூக்களால் ஆன லலிதா மகால், அரண்மனை, வனவிலங்குகளின் உருவங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
கஜபடை- மல்யுத்த வீரர்கள்
மேலும் மறைந்த மைசூரு மன்னர் நால்வடி கிருஷ்ணராஜ உடையார், ஜெயசாமராஜேந்திர உடையார் ஆகியோரின் சிலைகள் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. மேலும் தசரா விழாவில் கலந்துகொள்ளும் யானைகளின் கஜபடை போன்று பூச்செடிகளால் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது காண்போரை கவரும் வகையில் உள்ளது. அதுபோல் தசரா விழாவின் போது நடைபெறும் மல்யுத்த போட்டியை விளக்கும் வகையில் 2 வீரர்கள் குஸ்தி போடுவது போல் மலர்செடிகளால் வடிவமைக்கப்பட்டுள்ளது. இவை பார்வையாளர்களை கவரும் வகையில் உள்ளது.
அனுமதி இலவசம்
இதுதவிர கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் பல்வேறு வண்ண வண்ண பூச்செடிகளும் அரண்மனை மைதானத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இவற்றை மந்திரிகள் மற்றும் பொதுமக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டனர். சிலர் மலர்களால் ஆன விலங்குகள், கஜபடை, மல்யுத்த போட்டி வீரர்கள் ஆகியவற்றின் முன்பு நின்று செல்போன்களில் செல்பி படம் எடுத்து மகிழ்ந்தனர். முதல் நாளான நேற்று பார்வையாளர்கள் கூட்டம் குறைந்த அளவில் இருந்தது.
இந்த மலர் கண்காட்சிக்கு அனுமதி இலவசம். எனவே பொதுமக்கள் இந்த கண்காட்சியை கண்டுரசிக்கும் படி மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.