மந்திரி பதவி கிடைக்காததால் கட்சி மேலிடம் மீது சங்கமேஷ்வர் எம்.எல்.ஏ. கடும் அதிருப்தி அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க போவதாக பேட்டி

மந்திரி பதவி கிடைக்காததால், கட்சி மேலிடம் மீது சங்கமேஷ்வர் எம்.எல்.ஏ. கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளார்.

Update: 2018-12-22 22:30 GMT
சிவமொக்கா, 

மந்திரி பதவி கிடைக்காததால், கட்சி மேலிடம் மீது சங்கமேஷ்வர் எம்.எல்.ஏ. கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளார். மேலும் ஆதரவாளர்களுடன் பேசி அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க போவதாகவும் அவர் கூறியுள்ளார்.

மந்திரி பதவி கிடைக்கவில்லை

கர்நாடகத்தில் முதல்-மந்திரி குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. மந்திரிசபையில் காலியாக இருந்த இடங்கள் நேற்று நிரப்பப்பட்டன. 2 பேர் மந்திரிசபையில் இருந்து கைவிடப்பட்டார்கள். நேற்று நடந்த மந்திரிசபை விரிவாக்கத்தின் போது காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவரும், சிவமொக்கா மாவட்டம் பத்ராவதி தொகுதி எம்.எல்.ஏ.வுமான சங்கமேஷ்வருக்கு மந்திரி பதவி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவருக்கு மந்திரி பதவி கிடைக்கவில்லை.

கடும் அதிருப்தி

இதனால் அவரும், அவரது ஆதரவாளர்களும் ஏமாற்றம் அடைந்து உள்ளனர். தனக்கு மந்திரி பதவி கிடைக்காததால் காங்கிரஸ் மேலிடம் மீது சங்கமேஷ்வர் எம்.எல்.ஏ. கடும் அதிருப்தியை வெளிப் படுத்தி உள்ளார். அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

சிவமொக்கா மாவட்டத்தில் பத்ராவதி தொகுதியில் மட்டும் தான் காங்கிரஸ் வெற்றி பெற்று இருந்தது. அந்த தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ.வாக தேர்வான எனக்கு கட்சியின் மேலிடம் மந்திரி பதவி வழங்கும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் எனக்கு கிடைக்கவில்லை. உழைப்பவர்களுக்கு கட்சியின் மேலிடத்தில் மதிப்பு இல்லை.

மந்திரி பதவி கிடைக்காதது தொடர்பாக எனது ஆதரவாளர்களுடன் கலந்து பேசி அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்