மரங்கள் விழுந்து கிடப்பதால் போக்குவரத்து துண்டிப்பு: நார்த்தேவன்குடிகாடு-பனையக்கோட்டை இடையே பஸ் இயக்கப்படுமா? கிராம மக்கள் எதிர்பார்ப்பு

மரங்கள் விழுந்து கிடப்பதால் நார்த்தேவன்குடிகாடு-பனையக்கோட்டை இடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. பஸ் இயக்க வேண்டும் என கிராம மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

Update: 2018-12-22 22:45 GMT
சாலியமங்கலம்,

தஞ்சை அருகே உள்ள நார்த்தேவன்குடிகாடு-பனையக்கோட்டை இடையேயான சாலையோரம் இருந்த மரங்கள் பல ‘கஜா’ புயலில் விழுந்தன. இந்த மரங்களை அப்புறப்படுத்தும் பணி நடைபெற்றபோது அப்பகுதியில் பலவீனமாக இருந்த பெரிய மரம் ஒன்று சாய்ந்ததில் சாலை சேதம் அடைந்தது. மேலும் புயலில் விழுந்த மரங்கள் பல அப்புறப்படுத்தப்படாமல் அப்படியே கிடக்கின்றன.

இதனால் நார்த்தேவன்குடிகாடு-பனையக்கோட்டை இடையேயான பஸ் போக்குவத்து ஒரு மாதத்துக்கு மேலாக துண்டிக்கப்பட்டு உள்ளது. அரசப்பட்டு, பனையக்கோட்டை, நார்த்தேவன்குடிகாடு, சின்னபுலிகுடிகாடு ஆகிய கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் தஞ்சை போன்ற நகரங்களுக்கு செல்ல 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சடையார்கோவிலுக்கு சென்று அங்கிருந்து பஸ் ஏறுகிறார்கள். பள்ளி, கல்லூரி மாணவர்களும் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர்.

நார்த்தேவன்குடிகாடு கிராமத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெறுவதற்கும் சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையில் இடையூறாக இருக்கும் மரங்களை அப்புறப்படுத்தி, சாலையை சீரமைத்து பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

மேலும் செய்திகள்