ரூ.7,500 சம்பளத்தில் பணிபுரியும் தற்காலிக ஆசிரியர்களை நிரந்தரமாக்க ஏற்பாடு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி
ரூ.7,500 சம்பளம் பெற்று பணிபுரியும் தற்காலிக ஆசிரியர்களை நிரந்தரமாக்க ஏற்பாடு செய்யப்படும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கோபியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறினார்.
கோபி,
கோபி கலை அறிவியல் கல்லூரி சார்பில் நேற்று பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. நிகழ்ச்சியில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு ஒலிம்பிக் ஜோதியை ஏற்றிவைத்தும், கொடி அசைத்தும் ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். இந்த ஊர்வலத்தில் 100-க்கும் மேற்பட்டமாணவர்கள் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியின் முடிவில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழ்நாட்டில் உள்ள மாணவர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் உயர்கல்வி படிக்கும் மாணவர்களின் சதவீதம் 23.6 ஆகும். தமிழகத்தில் உயர்கல்வி படிக்கும் மாணவர்களின் சதவீதம் 48.9 ஆக உள்ளது.
பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் மாணவர்களுக்கு அரசு சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். தனியார் பள்ளிகளில் விடுமுறை தினங்களில் சிறப்பு வகுப்புகள் பெற்றோர்களின் விருப்பப்படி தான் நடைபெறுகிறது. அதை ஆய்வு செய்து பெற்றோர்களையும், தனியார் பள்ளி நிர்வாகத்தையும் அழைத்து பேசி நல்ல முறையில் அரசு பரிசீலனை செய்யும்.
தற்காலிக ஆசிரியர்கள் நியமனத்துக்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. எனவே ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பணி வழங்கும் வரை மட்டும் பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் நியமிக்கப்பட்ட தற்காலிக ஆசிரியர்கள் பணிசெய்வார்கள். ரூ.7,500 சம்பளத்தில் பணிபுரியும் இவர்களை நிரந்தரமாக்க ஏற்பாடு செய்யப்படும். அனைவருக்கும் கல்வி இயக்க திட்டத்தின் கீழ் பணியாற்றும் தற்காலிக ஆசிரியர்களும் தங்களுக்கு பணி வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். யாராக இருந்தாலும் தகுதித்தேர்வில் வெற்றி பெற்றால் மட்டுமே ஆசிரியர் பணி வழங்கப்படும். காலிப்பணியிடங்கள் அனைத்தும் கோட்டா முறையில் நிரப்பப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பிளஸ்-2 வேதியியல் வினாத்தாள் வெளியானது குறித்த ஒரு டி.வி.யில் வந்த செய்தி குறித்து நிருபர்கள் அமைச்சரிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு அமைச்சர் கூறும்போது, ‘செய்தி சேனல் என்பதால் 24 மணி நேரமும் ஏதாவது ஒன்று ஒளிபரப்பாகி கொண்டே இருக்கிறது’ என பதில் அளித்தார்.
முன்னதாக நடந்த ஊர்வலத்தில் கோபி கலை அறிவியல் கல்லூரின் தாளாளர் தரணிதரன், கல்லூரியின் டீன் செல்லப்பன், முதல்வர் தியாகராஜன், கல்லூரி துணைத்தலைவர் சண்முகசுந்தரம், டாக்டர் பாலமுருகன், லக்கம்பட்டி பேரூராட்சி முன்னாள் தலைவர் வேலுமணி, நம்பியூர் ஒன்றிய செயலாளர் தம்பி சுப்பிரமணியம், கோபி நகராட்சி முன்னாள் தலைவர் கந்தவேல் முருகன், லக்கம்பட்டி பேரூர் அ.தி.மு.க. செயலாளர் ஈஸ்வரமூர்த்தி உள்பட பலர் கலந்துகொண்டனர்.