திருச்சி அருகே பயங்கரம்: மகனை கழுத்தை அறுத்து கொன்று தாய் தற்கொலை வீடுகட்டும் பிரச்சினையில் கணவர் மீது ஏற்பட்ட கோபத்தால் பரிதாப முடிவு

திருச்சி அருகே வீடுகட்டும் பிரச்சினையில் கணவர் மீது ஏற்பட்ட கோபத்தால் மகனை கழுத்தை அறுத்து கொன்று விட்டு, தாயும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2018-12-22 23:45 GMT
திருவெறும்பூர்,

இந்த பரிதாப சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:- திருச்சி அருகே உள்ள திருவெறும்பூரை அடுத்த குண்டூர் ஊராட்சிக்கு உட்பட்ட அய்யம்பட்டி வள்ளாலகண்ட அய்யனார் கோவில் தெருவில் வசித்து வருபவர் முருகன் (வயது48). இவர் துவாக்குடி அரசு போக்குவரத்து பணிமனையில் பஸ் கண்டக்டராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கோமதி (40) என்கிற மனைவியும் 11-வது வகுப்பு படிக்கும் நந்தினி என்கிற மகளும், 9-வது வகுப்பு படிக்கும் சரவணன் (15) என்கிற மகனும் இருந்தனர்.

முருகனுக்கு சொந்த ஊர் புதுக்கோட்டை மாவட்டம் ஆவூர் அருகே உள்ள வடக்கு புதுப்பட்டி ஆகும். அங்கு சொந்தமாக வீடு கட்ட வேண்டும் என்ற ஆசையில் முருகன் ஏற்கனவே நிலம் வாங்கி வைத்து இருந்தார். ஆனால், அங்கு வீடு கட்டுவது மனைவி கோமதிக்கு பிடிக்கவில்லை என கூறப்படுகிறது. கோமதிக்கு துவாக்குடி பக்கம் உள்ள தனது சொந்த ஊரான மாங்காவனம் பகுதியிலோ அல்லது திருச்சி நகருக்குள்தான் வீடு கட்ட வேண்டும் என்பது ஆசையாக இருந்தது. அதை கணவர் முருகனிடம் கூறினார். ஆனால் இதில் முருகனுக்கு விருப்பமில்லை. மேலும் வடக்கு புதுப்பட்டியில் தான் வீடு கட்டுவது என அவர் முடிவெடுத்தார்.

கடந்த 3 மாத காலமாக இந்த இடம் வாங்கியது குறித்து கணவன்-மனைவிக்கிடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வடக்கு புதுப்பட்டியில் உள்ள இடத்தில், முருகன் பூமி பூஜை நடத்தியதோடு வீடு கட்டுவதற்கான வேலைகளையும் தொடங்கினார். இதனால், கோபத்தின் உச்சிக்கே சென்ற கோமதி கணவரிடம் மீண்டும் தகராறு செய்ததில் அடிதடி மோதல் வரை சென்று விட்டது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் முருகன் வேலைக்கு சென்று விட்டார். இரவில் மகள் நந்தினி ஒரு தனி அறையில் பரீட்சைக்காக படித்து விட்டு தூங்கி விட்டார்.

நேற்று காலை நந்தினி எழுந்து பார்த்தபோது தாய் கோமதியும், தம்பி சரவணனும் படுத்திருக்கும் அறை திறக்காததை கண்டார். பின்னர் அறைக்கதவை தட்டி உள்ளார்.

ஆனால், கதவு திறக்கப் படவில்லை. இதனால் பதற்றமான நந்தினி அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ஜன்னலை திறந்து பார்த்தார். அங்கு, தாயார் கோமதி தூக்கில் அசைவற்று தொங்கி கொண்டி ருந்தார்.

இது குறித்து நவல்பட்டு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப் பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமரன் மற்றும் போலீசார் விரைந்து சென்று கதவை உடைத்து உள்ளே நுழைந்தனர். அங்கு கோமதி தூக்கில் பிணமாக கிடப்பதையும், அவர் அருகிலேயே படுக்கையில் சரவணன் கத்தியால் கழுத்து அறுக்கப்பட்டு இறந்து கிடப்பதையும் பார்த்தனர். விசாரணையில் மகனை கழுத்தை அறுத்து கொன்று விட்டு கோமதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

பின்னர் இருவரது உடல்களையும் போலீசார் மீட்டு, பிரேத பரி சோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், வீடு கட்டும் பிரச்சினையில் தன் மகனை கத்தியால் கழுத்தை அறுத்து கொன்று விட்டு கோமதியும் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

மேலும் செய்திகள்