நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் அனைத்து தொகுதிகளிலும் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறும் மேலிட பார்வையாளர் சஞ்சய்தத் பேச்சு

நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் அனைத்து தொகுதிகளிலும் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறும் என்று கட்சியின் மேலிட பார்வையாளர் சஞ்சய்தத் பேசினார்.

Update: 2018-12-22 21:30 GMT
விளாத்திகுளம், 

நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் அனைத்து தொகுதிகளிலும் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறும் என்று கட்சியின் மேலிட பார்வையாளர் சஞ்சய்தத் பேசினார்.

ஆலோசனை கூட்டம்

விளாத்திகுளம் தனியார் மண்டபத்தில் வட்டார, நகர காங்கிரஸ் பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. வடக்கு மாவட்ட தலைவர் சீனிவாசன் தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச்செயலாளர் செஞ்சி ரெட்டி, மாநில பொதுச்செயலாளர் அருள் பெத்தையா, மாவட்ட பொறுப்பாளர் வேல்துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் காங்கிரஸ் தேசிய செயலாளரும், மேலிட பார்வையாளருமான சஞ்சய்தத் கலந்து கொண்டு பேசினார். அப்போது, அவர் கூறியதாவது:-

தமிழகம் முழுவதும் கிராமங்கள்தோறும் காங்கிரஸ் கட்சிக்கு வாக்குசாவடி முகவர்களை நியமித்து, கட்சியை பலப்படுத்த வேண்டும். விளாத்திகுளம் தொகுதியில் உள்ள 259 வாக்குசாவடிகளிலும் வாக்குசாவடி முகவர்களை இந்த மாத இறுதிக்குள் நியமிக்க வேண்டும்.

மத்தியில் ஆளும் பா.ஜ.க.வும், தமிழகத்தில் ஆளும் அ.தி.மு.க.வும் மக்கள் விரோதபோக்கினை கடைப்பிடித்து வருகிறது.

காங்கிரஸ் கூட்டணி வெற்றி

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி வருகிறது. ஆனால் அ.தி.மு.க. அரசு அவ்வாறு செய்யாமல், நீதிமன்றத்தில் வழக்கினை நடத்தி வருகிறது. இதனால் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க தமிழக அரசு மறைமுகமாக உதவி வருகிறது.

சமீபத்தில் 5 மாநிலங்களில் நடந்த சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க. பெரும் பின்னடைவை சந்தித்து உள்ளது. நாடு முழுவதும் ராகுல்காந்தி அலை வீசி வருகிறது. வருகிற நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் அனைத்து தொகுதிகளிலும் காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெறும். ராகுல்காந்தி பிரதமராக பதவி ஏற்பது உறுதி.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில், மாவட்ட செயலாளர் அழகு மணிகண்டன், பொருளாளர் திருப்பதி ராஜா, தொகுதி பொறுப்பாளர் பெத்துராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்