ஆருத்ரா தரிசன விழாவையொட்டி சிதம்பரம் நடராஜர் கோவிலில் தேரோட்டம் கொட்டும் மழையில் பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்
ஆருத்ரா தரிசன விழாவையொட்டி சிதம்பரம் நடராஜர் கோவிலில் நேற்று தேரோட்டம் நடைபெற்றது. கொட்டும் மழையிலும் பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர்.
சிதம்பரம்,
உலக புகழ்பெற்ற நடராஜர் கோவில் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ளது. பஞ்ச பூத தலங்களில் ஆகாய தலமான இக்கோவிலில் ஆண்டுதோறும் 6 மகா அபிஷேகங்கள் நடைபெறுவது வழக்கம். இதில் ஆனி மாதத்தில் ஆனித்திருமஞ்சன விழாவும், மார்கழி மாதத்தில் ஆருத்ரா தரிசன விழாவும் வெகுவிமரிசையாக நடைபெறும்.
தமிழ் மாதங்களில் மார்கழி மாதத்தில் வரும் திருவாதிரை நட்சத்திரம் சிவனுக்குரிய நட்சத்திரமாகும். அந்த நாள் சிவபெருமான் நடராஜராக ஆனந்த நடனம் புரியும் நன்னாளாகும். அந்த நாளில் நடராஜர் திரு நடனம் புரிந்தபடி பக்தர்களுக்கு காட்சி கொடுப்பார். ஆனித்திருமஞ்சனம் மற்றும் ஆருத்ரா தரிசன விழாக்களின்போது மூலவராகிய நடராஜ மூர்த்தியே, உற்சவராக புறப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலிப்பது சிறப்பு வாய்ந்த ஒன்றாகும்.
இத்தகைய சிறப்பு மிக்க ஆருத்ரா தரிசன விழா 12 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான விழா கடந்த 14-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து விநாயகர், சுப்பிரமணியர், நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாள், சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகளுக்கு தினமும் சிறப்பு அபிஷேகமும், பூஜையும் மற்றும் வெவ்வேறு வாகனங்களில் வீதி உலா காட்சியும் நடந்தது.
9-வது நாள் விழாவான நேற்று தேரோட்டம் வெகு விமரிசையாக நடந்தது. இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, சித்சபையில் இருந்து கனக சபைக்கு மூலவராகிய சிவகாமசுந்தரி அம்பாள், நடராஜமூர்த்தி கொண்டு வரப்பட்டனர். அங்கு சிவகாமசுந்தரிக்கும், நடராஜருக்கும் பால், தேன் உள்ளிட்ட பலவிதமான பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் சிவகாமசுந்தரியும், நடராஜமூர்த்தியும் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். இதனை தொடர்ந்து நடராஜர், சிவகாமசுந்தரி, விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் ஆகியோர் பல்லக்கில் எழுந்தருளி கோவில் உள் பிரகாரத்தில் வலம்வந்து, காலை 5.30 மணியளவில் கிழக்குரத வீதியில் தேர் நிலையில் உள்ள மண்டபத்தை அடைந்தனர்.
அங்கு சாமிகளுக்கு சிறப்பு பூஜை நடந்தது. அதன்பின் அலங்கரிக்கப்பட்டு தயார் நிலையில் இருந்த 5 தேர்களில் முதல் தேரில் விநாயகர், 2-வது தேரில் சுப்பிரமணியர், 3-வது தேரில் நடராஜர், 4-வது தேரில் சிவகாமசுந்தரி, 5-வது தேரில் சண்டிகேஸ்வரர் ஆகியோர் எழுந்தருளினர். கைலாய வாத்தியங்களின் இசை முழங்க மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னர் காலை 7.30 மணிக்கு விநாயகர் தேரும், 8 மணிக்கு சுப்பிரமணியர் தேரும் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து 8.15 மணிக்கு ஆடலரசர் நடராஜர் தேரை சிவ சிவா, ஓம் நமசிவாய, ஓம் நமசிவாய என்ற பக்தி கோஷங்களுடன் பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். அதன் பின்னர் 8.45 மணியளவில் சிவகாமசுந்தரி அம்பாள் தேரையும், 9 மணிக்கு சண்டிகேஸ்வரர் தேரையும் பக்தர்கள் இழுத்தனர். அதிகாலையில் இருந்தே மழை பெய்து கொண்டிருந்தது. மழையையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். 4 வீதியையும் சுற்றி வந்த விநாயகர் மற்றும் சுப்பிரமணியர் தேர் முதலில் நிலையை வந்தடைந்தது. பின்னர் நடராஜர் மற்றும் சிவகாமசுந்தரி அம்பாள், சண்டிகேஸ்வரர் ஆகிய தேர்கள் கிழக்கு ரதவீதியில் மதியம் 11.30 மணிக்கு நிலையை வந்தடைந்தது.
இதனை தொடர்ந்து சிவகாமசுந்தரி அம்பாள், நடராஜருக்கு 21 முறை தீபாராதனை நடந்தது. பின்னர் தேரில் இருந்து இறங்கிய நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாள் ஆகியோர் ராஜசபை என்று அழைக்கப்படும் ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளினார்கள். அங்கு மண்டக படியும், லட்சார்ச்சனையும் நடைபெற்றது. இதில் கடலூர் மாவட்டம் மட்டுமின்றி வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்கள், வெளிநாட்டை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தேர் வீதிகளில் வலம் வந்தபோது அதற்கு தகுந்தாற்போல் நகரில் வாகன போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. விழாவின்போது அசம்பாவித சம்பவங்களை தடுப்பதற்காக 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
சிகர நிகழ்ச்சியும், 10-ம் நாள் திருவிழாவுமான ஆருத்ரா தரிசனம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. அதிகாலை 2 மணி முதல் 7 மணி வரை ஆயிரங்கால் முகப்பு மண்டபத்தில் சிவகாமசுந்தரி அம்பாளுக்கும், நடராஜருக்கும் மகாஅபிஷேகம் நடைபெறும்.
பின்னர் சித்சபையில் ரகசிய பூஜை, பஞ்சமூர்த்திகள் வீதிஉலா காட்சி நடந்து, மதியம் 2 மணிக்கு மேல் ஆருத்ரா தரிசனம் நடைபெற உள்ளது. பின்னர் நாளை(திங்கட்கிழமை) பஞ்சமூர்த்திகள் முத்துப்பல்லக்கில் வீதிஉலா காட்சியும், நாளை மறுநாள்(செவ்வாய்க்கிழமை) தெப்ப உற்சவமும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை பொதுதீட்சிதர்கள் செய்து வருகின்றனர்.