மதம் பிடித்துள்ள விநாயகன் யானை ஊருக்குள் வராமல் கண்காணிக்க உத்தரவு புலிகள் காப்பக கள இயக்குனர் தகவல்
மதம் பிடித்துள்ள விநாயகன் யானை ஊருக்குள் வராமல் கண்காணிக்க வனத்துறை ஊழியர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாக முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் கூறினார்.
மசினகுடி,
கோவை அருகே வரப்பாளையம், பெரியதடாகம் பகுதிகளில் கடந்த 6 மாதங்களாக குடியிருப்பு பகுதிகளிலும், விவசாய நிலங்களிலும் புகுந்து பொதுமக்களையும், விவசாயிகளையும் விநாயகன், சின்னதம்பி என்ற 2 காட்டுயானைகள் அச்சுறுத்தி வந்தன. அதில் முதற்கட்டமாக விநாயகன் யானை கடந்த சில நாட்களுக்கு முன்பு மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது. பின்னர் அந்த யானை வனத்துறை லாரியில் ஏற்றப்பட்டு, முதுமலை புலிகள் காப்பகத்துக்கு கொண்டு வரப்பட்டது. முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பகாடு வனப்பகுதியில் விடப்பட்டுள்ள விநாயகன் யானை, வனத்துறையினரால் தொடர்ந்து கண்காணிக்கபட்டு வருகிறது.
இந்த நிலையில் வனப்பகுதியில் விநாயகன் யானையின் நடமாட்டத்தை முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் தீபக் ஸ்ரீவத்சவா நேரில் சென்று பார்வையிட்டார். அதன்பிறகு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
முதுமலைக்கு கொண்டு வரபட்டு, தெப்பகாடு வனப்பகுதியில் விடப்பட்ட விநாயகன் யானை முதல் 2 நாட்கள் உடல் சோர்வுடன் காணப்பட்டது. ஆனால் தற்போது பசுந்தீவனங்களை நன்றாக சாப்பிட்டு, உற்சாகமாக வனப்பகுதியில் சுற்றி வருகிறது. 4.7 டன் எடை கொண்ட அந்த யானை சகஜ நிலைக்கு வந்துள்ளது. அதன் கழுத்தில் ரூ.1.8 லட்சம் மதிப்பிலான ரேடியோ காலர் என்ற கண்காணிப்பு கருவி பொருத்தபட்டு உள்ளது. இதன் மூலம் அந்த யானை 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. கர்நாடக மாநிலம் பந்திப்பூர் வனப்பகுதிக்கு சென்ற விநாயகன் யானை, தற்போது மீண்டும் முதுமலை வனப்பகுதிக்குள் திரும்பி வந்துள்ளது. மணல் சாலை, பொன்னங்கிரி சாலை, வட்ட சாலை பகுதிகளில் சுற்றி வருகிறது. அந்த யானைக்கு மதம் பிடித்து மதநீர் காது ஓரத்தில் வழிகிறது. இதனால் அந்த யானை ஊருக்குள் வராமல் கண்காணிக்குமாறு வனத்துறை ஊழியர்களுக்கு உத்தரவிட்டுள்ளேன். பெரிய தடாகம் பகுதியில் சுற்றித்திரியும் சின்னதம்பி யானை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. அந்த யானையால் பொதுமக்களுக்கு மீண்டும் தொந்தரவு ஏற்பட்டால் மட்டுமே அதனை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.