வங்கி அதிகாரிகள் வேலைநிறுத்தம் திருப்பூர் மாவட்டத்தில் ரூ.500 கோடி பணப்பரிவர்த்தனை முடங்கியது

வங்கி அதிகாரிகள் வேலைநிறுத்தம் காரணமாக திருப்பூர் மாவட்டத்தில் நேற்று ஒருநாள் மட்டும் ரூ.500 கோடிக்கு பணப்பரிவர்த்தனை முடங்கியது. வங்கி சேவை பாதிப்பால் வாடிக்கையாளர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

Update: 2018-12-21 22:45 GMT
திருப்பூர்,

மத்திய அரசு அதிகாரிகளுக்கு இணையாக வங்கி அதிகாரிகளுக்கு ஊதியம் வழங்க வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். சிறிய வங்கிகளை இணைக்கக்கூடாது என்பது உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு சார்பில் நாடு முழுவதும் நேற்று ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம் நடந்தது.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வங்கி மேலாளர்கள், உதவி மேலாளர்கள் உள்பட அதிகாரிகள் நேற்று பணிக்கு வரவில்லை. ஊழியர்கள் மட்டும் பணிக்கு வந்திருந்தனர். எனினும் வங்கி அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் தான் பாதுகாப்பு பெட்டகம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் இருப்பதால் வங்கி சேவைகள் நேற்று முற்றிலும் முடங்கின. இதனால் வங்கிகளுக்கு வந்த வாடிக்கையாளர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கத்தின் சார்பில் திருப்பூர் ஊத்துக்குளி ரோடு பாரத ஸ்டேட் வங்கி முன்பு நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் விஜயானந்த் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் ராஜமாணிக்கம், ரித்திஷ் பிரபாகர், பிரபுகுமார் உள்பட 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். மாவட்டத்தில் பாரத ஸ்டேட் வங்கிகள் நேற்று முற்றிலும் செயல்படவில்லை.

வேலைநிறுத்த போராட்டம் குறித்து சங்கத்தின் மாவட்ட தலைவர் விஜயானந்த் கூறும்போது, திருப்பூர் மாவட்டத்தில் 45 பாரத ஸ்டேட் வங்கிகள் முற்றிலும் செயல்படவில்லை. மேலும் பல வங்கிகளின் அதிகாரிகள் இந்த வேலைநிறுத்த போராட்டத்தில் கலந்து கொண்டனர். இதனால் மாவட்டத்தில் நேற்று ஒருநாள் மட்டும் ரூ.500 கோடிக்கு பணப்பரிவர்த்தனை முடங்கியது என்றார்.

4-வது சனிக்கிழமையான இன்றும், ஞாயிற்றுக் கிழமையான நாளையும் வங்கிகளுக்கு விடுமுறை. இதன் காரணமாக வங்கி ஏ.டி.எம்.களில் பணத்தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. 24-ந் தேதி வங்கிகள் வழக்கம்போல் செயல்படும் என்றாலும், 25-ந் தேதி கிறிஸ்துமஸ் விடுமுறை ஆகும். 26-ந் தேதி வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் சங்கங்கள் இணைந்து வேலைநிறுத்த போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளதால் அன்றைய தினமும் வங்கி சேவைகள் பாதிக்கும் என தெரிகிறது.

மேலும் செய்திகள்