புதுவையில் மீண்டும் பயங்கரம்: மெக்கானிக் சரமாரியாக வெட்டி கொலை மர்ம கும்பலுக்கு வலைவீச்சு

புதுவை நெல்லித்தோப்பில் மெக்கானிக் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக மர்ம கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2018-12-21 23:14 GMT
புதுச்சேரி,

புதுவை முத்தியால்பேட்டை சின்னையாபுரத்தை சேர்ந்தவர் செங்கேணி. தட்டுவண்டி தொழிலாளி. இவருடைய மனைவி சரசு. இவர்களது மகன் குமரேசன் என்கிற அய்யப்பன் (வயது26). இவர் நூறடி சாலையில் ஒரு தனியார் நிறுவனத்தில் மெக்கானிக் ஆக வேலைசெய்து வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார். சிகிச்சை முடிந்து சமீபத்தில் தான் அய்யப்பன் மீண்டும் பணியில் சேர்ந்தார். நேற்று காலை வழக்கம்போல அவர் வேலைக்கு சென்றார். பின்னர் தனது நண்பரான சங்கர் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பினார்.

மோட்டார் சைக்கிளை சங்கர் ஓட்டி வந்தார். இவர்களை பின்தொடர்ந்து 2 மோட்டார் சைக்கிள்களில் 4 பேர் வந்தனர். மாலை 6.30 மணியளவில் நெல்லித்தோப்பு மணிமேகலை பள்ளி அருகே வந்தபோது, பின்தொடர்ந்து வந்த அந்த மர்ம கும்பலை சேர்ந்தவர்கள் திடீரென்று அய்யப்பன் சென்ற மோட்டார் சைக்கிளை வழிமறித்தனர். திடீரென்று கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் தாக்கினார் கள். இதில் நிலைதடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து அய்யப்பன், சங்கர் இருவரும் நடுரோட்டில் விழுந்தனர்.

அப்போது அந்த கும்பல் அய்யப்பனை சுற்றி வளைத்து தலை, உடல் முழுவதும் சரமாரியாக வெட்டியது. இதை தடுக்க வந்த சங்கரையும் அந்த கும்பலை சேர்ந்தவர்கள் தாக்கிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். அய்யப்பன் ரத்த வெள்ளத்தில் நடுரோட்டில் உயிருக்கு போராடினார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த உருளையன்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உயிருக்கு போராடிய அய்யப்பனை மீட்டு சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்துபோனார்.

இதுபற்றி தகவல் அறிந்தவுடன் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராகுல் அல்வால், போலீஸ் சூப்பிரண்டுகள் மாறன், ரங்கநாதன், செல்வம் மற்றும் போலீசார் ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள்.

இந்த சம்பவம் குறித்து உருளையன்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம கும்பலை சேர்ந்தவர்கள் யார்? கொலைக்கான காரணம் என்ன? முன்விரோதம் காரணமாக கொலை நடந்ததா? உள்ளிட்ட பல்வேறு கோணங் களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு இதே பகுதியில் பூட்டிய வீட்டுக்குள் கழுத்தை அறுத்து புதுப்பெண் படுகொலை செய்யப்பட்டார். அந்த பரபரப்பு அடங்குவதற்குள் மீண்டும் ஒரு படுகொலை சம்பவம் அரங்கேறி இருப்பதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்