பல்லடம் அருகே பரிதாபம்: பள்ளி வேன் சக்கரத்தில் சிக்கி மாணவன் பலி -டிரைவர், உதவியாளர் கைது

பல்லடம் அருகே பள்ளி வேன் சக்கரத்தில் சிக்கி 5-ம் வகுப்பு மாணவன் பலியானான். இது தொடர்பாக டிரைவர், உதவியாளரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-12-21 23:15 GMT
காமநாயக்கன்பாளையம்,

திருப்பூர் மாவட்டம் காமநாயக்கன்பாளையம் அருகே உள்ள இலவந்தி ஊராட்சி அக்ராணம் என்ற பகுதியை சேர்ந்தவர் பரமசிவம். விவசாயி. இவருடைய மனைவி ரஞ்சிதம். இவர்களது மகன் சஞ்சய்குமார்(வயது 10). இவன் பல்லடம்-பொள்ளாச்சி சாலையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தான்.

நேற்று காலை வழக்கம் போல் வீட்டில் இருந்து பள்ளி வேனில் சஞ்சய்குமார் பள்ளிக்கு சென்றான். பின்னர் மாலை அதே பள்ளி வேன் மூலம் வீடு திரும்பி கொண்டு இருந்தான்.

இந்த நிலையில் அக்ராணம் பகுதியில் உள்ள ஏ.டி.காலனி அருகே பள்ளி வேன் நின்றது. வேனில் இருந்து ஒரு மாணவன் இறக்கி விடப்பட்டான். பின்னர் வேனை டிரைவர் பின்னோக்கி ஓட்டி விட்டு முன்புறமாக வேகமாக திருப்பினார்.

அப்போது பள்ளி வேனின் கதவு அருகே அமர்ந்திருந்த மாணவன் சஞ்சய்குமார் வெளியே தூக்கி வீசப்பட்டான். அப்போது வேன் கதவு திறந்து கொண்டதால் சாலையில் விழுந்தான்.

மாணவன் கீழே விழுந்ததை கவனிக்காமல் டிரைவர் வேனை முன்னோக்கி ஓட்டினார். அப்போது வேனின் முன்பக்க சக்கரம் சஞ்சய்குமார் மீது ஏறி இறங் கியது. இதை பார்த்த மற்ற மாணவர்கள் அய்யோ! அம்மா! என பயத்தில் அலறினார்கள். கண் இமைக்கும் நேரத்தில் பள்ளி வேனின் சக்கரத்தில் மாணவன் சிக்கி கொண்டதை பார்த்த அக்கம், பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்து அங்கு ஓடி வந்தனர்.

வேன் சக்கரத்தில் சிக்கிய மாணவன் அலறியபடியே மயங்கினான். ரத்த வெள்ளத்தில் கிடந்த மாணவனை மீட்டு பொதுமக்கள் இலவந்தி அரசு சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு அவனை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே மாணவன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதற்கிடையே தனது மகன் பள்ளி வேனில் அடிபட்டதை அறிந்ததும் பதறியபடியே அவனது பெற்றோர் கதறி அழுதவாறே ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு ஓடி வந்தனர். அங்கு மகன் இறந்து விட்டான் என்று டாக்டர் கூறியதும் அவனது உடலை வாரி அணைத்து பெற்றோர் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.

இதற்கிடையே விபத்து ஏற்படுத்திய பள்ளி வேன் டிரைவர் மற்றும் உதவியாளரை பொதுமக்கள் சுற்றி வளைத்து பிடித்து சரமாரியாக தாக்கினார்கள்.

இது குறித்து தகவல் அறிந்ததும் காமநாயக்கன்பாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு பொதுமக்களின் பிடியில் இருந்து பள்ளி வேன் டிரைவர், உதவியாளரை மீட்டு போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில் பள்ளி வேன் டிரைவராக பணியாற்றியவர் மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்த கொங்கம் ரத்தன்குமார் சிங்(29) என்றும், உதவியாளராக பணியாற்றியவர் பல்லடம் வடுகப்பாளையத்தை சேர்ந்த வேலுசாமி(55) என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து விபத்துக்கு காரணமான அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். பள்ளி வேன் மோதி மாணவன் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த விபத்து குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-

விபத்துக்குள்ளான பள்ளி வேனை டிரைவர் தாறுமாறாக ஓட்டியதால் தான் மாணவன் சஞ்சய்குமார் பலியாகி இருக்கிறான். பள்ளி வேனில் கதவை சரிவர பூட்டவில்லை. மாறாக வேன் கதவை கயிற்றை கொண்டு கட்டி வைத்து இருக்கிறார்கள். அதனால் தான் வேகமாக வேனை டிரைவர் திருப்பிய போது இருக்கையில் இருந்த மாணவன் சஞ்சய்குமார் தூக்கி வீசப்பட்டு உள்ளான். மாணவன் விழுந்ததில் கதவு தானாக திறந்து கொண்டது. வெளியே விழுந்த மாணவன் அதே பள்ளி வேன் சக்கரத்தில் சிக்கி பலியாகி இருக்கிறான்.

பள்ளிக்கூட மாணவர்களை ஏற்றி செல்லும் வேன் பாதுகாப்பாக இருக்க வேண்டும். ஆனால் பள்ளி வேன் கதவை சரிவர மூடாமல் அஜாக்கிரதையாக செயல்பட்டு உள்ளனர். இதனால் மாணவனின் உயிரிழப்பு ஏற்பட்டு உள்ளது. எனவே இனி வரும் காலங்களிலாவது வட்டார போக்குவரத்து அதிகாரிகள் பள்ளி வேனை அவ்வப்போது பரிசோதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வேகமாக பள்ளி வாகனங்களை இயக்குபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்