நடைமேடைக்கும், ரெயிலுக்கும் இடையே சிக்கி பெண் பலி
சென்னை எழும்பூரில் நடைமேடைக்கும், ரெயிலுக்கும் இடையே சிக்கி இளம்பெண் பரிதாபமாக இறந்தார்.
சென்னை,
அசாம் மாநிலம் கவுகாத்தியை சேர்ந்தவர் நிர்மல். இவருடைய மனைவி ஜும்கா சிடே(வயது 33). நிர்மல் மற்றும் அவரது மனைவி ஜும்கா சிடே இருவரும் சென்னையில் உள்ள மேடவாக்கத்தில் வசித்தனர்.
இந்தநிலையில் ஜும்கா சிடே நேற்று முன்தினம் மாலை ‘திப்ரூகர் எக்ஸ்பிரஸ்’ ரெயில் மூலம் கவுகாத்தி செல்ல முன்பதிவு செய்திருந்தார். இதற்காக அவர் எழும்பூர் ரெயில் நிலையத்துக்கு வந்தார். ஆனால் அவர் 5-வது நடைமேடையை சென்றடைவதற்கு முன்பு திப்ரூகர் எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டது.
உயிரிழந்தார்
இதனால் அதிர்ச்சி அடைந்த ஜும்கா சிடே, ஓடிச்சென்று அவசரமாக ரெயிலில் ஏற முயன்றார். அப்போது அவர் கால் தவறி நடைமேடைக்கும், ரெயிலுக்கும் இடையே விழுந்து விட்டார். இதில் படுகாயம் அடைந்த அவர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுபற்றி தகவல் அறிந்துவந்த எழும்பூர் ரெயில்வே போலீசார், பலியான ஜும்கா சிடேயின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.