கலெக்டர் அலுவலகம் முன்பு கிராம நிர்வாக அலுவலர்கள் முற்றுகை 59 பெண்கள் உள்பட 197 பேர் கைது
தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட 59 பெண்கள் உள்பட 197 கிராம நிர்வாக அலுவலர்களை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட 59 பெண்கள் உள்பட 197 கிராம நிர்வாக அலுவலர்களை போலீசார் கைது செய்தனர்.
வேலைநிறுத்தம்
தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் அனைத்து கிராமங்களிலும் இணையதள வசதி, மின் இணைப்பு வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாத சூழ்நிலையில் ஆன்லைனில் சான்றிதழ் வழங்கும் பணியை செய்ய அரசு வலியுறுத்துவதை கண்டித்தும், கிராம நிர்வாக அலுவலர்களுக்கு நவீன கம்ப்யூட்டர் உபகரணங்களை வழங்க வேண்டும், அலுவலக கட்டிடம் இல்லாத கிராமங்களுக்கு அலுவலக கட்டிடங்கள் கட்டவேண்டும், 30 சதவீத அளவுக்கு பெண் கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ள நிலையில், அனைத்து அலுவலகங்களிலும் கழிப்பறை, குடிநீர், மின்வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும்.
பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்துதல், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கலெக்டர் அலுவலகம் முற்றுகை
அதன்படி நேற்று தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்தினர். போராட்டத்துக்கு தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க மாவட்ட தலைவர் கணேசபெருமாள் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் மாரிமுத்து முன்னிலை வகித்தார்.
போராட்டத்தின் போது, கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதைத் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் முற்றுகை போராட்டம் நடத்திய கிராம நிர்வாக அலுவலர்கள் 59 பெண்கள் உள்பட 197 பேரை கைது செய்தனர்.