பரமத்தி வேலூரில், வரத்து குறைவு எதிரொலி: வாழைத்தார் விலை உயர்வு
பரமத்தி வேலூரில் வாழைத்தார் வரத்து குறைந்ததன் எதிரொலியாக அதன் விலை உயர்ந்து உள்ளது.
பரமத்தி வேலூர்,
பரமத்தி வேலூர் காவிரி கரையோர பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் வாழை பயிர் செய்யப்பட்டு உள்ளது. இங்கு விளையும் வாழைத்தார்கள் கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும், சேலம், கோவை, ஈரோடு, கரூர், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும் தினந்தோறும் லாரிகள் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது.
மேலும் பரமத்தி வேலூர் தினசரி வாழைத்தார் ஏல சந்தையிலும் வாழைத்தார்கள் ஏலம் விடப்பட்டு வருகிறது.
கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்திற்கு 1,500 வாழைத்தார்களை விவசாயிகள் ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர். இதில் பூவன் வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.150-க்கும், ரஸ்தாளி அதிகபட்சமாக ரூ.250-க்கும், பச்சைநாடன் அதிகபட்சமாக ரூ.200-க்கும், கற்பூரவள்ளி வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.300-க்கும் ஏலம் போனது. மொந்தன் வாழைக்காய் ஒன்று ரூ.5-க்கு விற்பனையானது. இந்த நிலையில் நேற்று நடைபெற்ற ஏலத்திற்கு 600 வாழைத்தார்கள் மட்டுமே விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். இதில் பூவன் வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.400-க்கும், ரஸ்தாளி அதிகபட்சமாக ரூ.450-க்கும், பச்சைநாடன் அதிகபட்சமாக ரூ.450-க்கும், கற்பூரவள்ளி வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.500-க்கும் ஏலம் போனது. மொந்தன் வாழைக்காய் ஒன்று ரூ.8-க்கு விற்பனையானது. வாழைத்தார் வரத்து குறைந்ததன் எதிரொலியாக அதன் விலை உயர்ந்து உள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.