தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வந்த 4,800 அலங்கார ஆமைகள் திருப்பி அனுப்பப்பட்டன
தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்திவரப்பட்ட 4,800 சிகப்பு காது அலங்கார ஆமைகள் திருப்பி அனுப்பப்பட்டது. அவற்றை கடத்தி வந்த 2 பேருக்கு தலா ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
ஆலந்தூர்,
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு தாய்லாந்தில் இருந்து விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர். அப்போது சிவகங்கை மாவட்டம் இளையான்குடியை சேர்ந்த காதர் பாஷா அப்துல் வஹாப் (வயது 68), முஜிபுர் ரகுமான் (22) ஆகியோர் அந்த விமானத்தில் இருந்து இறங்கி வந்தனர்.
அவர்களின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த சுங்க இலாகா அதிகாரிகள், 2 பேரையும் நிறுத்தி விசாரித்தனர். அதிகாரிகளிடம் அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் அவர்களிடம் இருந்த உடமைகளை சோதனை செய்தனர்.
நட்சத்திர ஆமைகள்
அதில் அவர்களிடம் இருந்த அட்டைப்பெட்டிகளில் உயிருள்ள ஆமைகள் அதிகமாக இருந்ததை கண்டுபிடித்த னர். அந்த ஆமைகளை ஆய்வு செய்தபோது அவை சீனா, தாய்லாந்து, மலேசியா போன்ற நாடுகளில் வளரக்கூடிய சிகப்பு காது அலங்கார ஆமைகள் என்பதும், அவற்றை சீனாவில் இருந்து தாய்லாந்து வழியாக சென்னைக்கு கடத்தி வந்ததையும் கண்டுபிடித்தனர்.
இதையடுத்து 2 பேரிடம் இருந்தும் 4,800 ஆமைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இது போன்ற ஆமைகள் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டு உள்ளது. இவைகளால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதால் 4,800 ஆமைகளையும் மீண்டும் தாய்லாந்துக்கே திருப்பி அனுப்பப்பட்டது.
இதற்கான செலவு தொகைக்காக ஆமைகளை கடத்தி வந்த 2 பேருக்கும் தலா ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.