புதுச்சேரி புதுப்பெண் கொலையில் குற்றவாளிகளை பிடிக்க முடியாமல் போலீசார் திணறல்

புதுப்பெண் கொலை வழக்கில் குற்றவாளிகளை பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.

Update: 2018-12-20 22:15 GMT
புதுச்சேரி,

புதுச்சேரி குயவர்பாளையத்தை சேர்ந்த பூபதி மகள் அம்சபிரபா (வயது 25), தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்து வந்தார். இவருக்கு அடுத்த மாதம் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. இந்தநிலையில் கடந்த 18-ந் தேதி பூட்டிய வீட்டுக்குள் அம்சபிரபா கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் மர்மமான முறையில் கிடந்தார். அவரை உறவினர்கள் மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்துபோனார்.

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக உருளையன்பேட்டை போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது போலீசாரிடம் அம்சபிரபா கொலை செய்யப்பட்டுள்ளதாக அவரது பெற்றோர் தெரிவித்தனர். ஆனால் அம்சபிரபா வயிற்று வலியால் கழுத்தை அறுத்து தற்கொலை செய்துகொண்டதாக வழக்குப்பதிவு செய்தனர்.

இந்தநிலையில் பிரேத பரிசோதனை அறிக்கையில் அம்சபிரபா கற்பழித்து, கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதனால் வேறு வழியின்றி அவசர அவசரமாக கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை நடத்தினர்.

அம்சபிரபா வீட்டின் அருகில் உள்ள வாலிபர் மற்றும் அவரது நண்பரை சந்தேகத்தின் பேரில் பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். ஆனால் கொலைக்கான தடயங்கள் எதுவும் கிடைக்கவில்லை. இதனால் குற்றவாளிகளை கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள் ளது. கொலையாளி யார்? என தெரியாமல் போலீசார் திணறி வருகிறார்கள்.

அம்சபிரபா கொலை செய்யப்பட்ட அன்றே போலீசார் துரிதமாக செயல்பட்டிருந்தால் கொலையாளிகளை பிடித்திருக்கலாம். போலீசாரின் அலட்சியத்தால் கொலையாளிகளை நெருங்குவதில் சிக்கல் நீடித்து வருகிறது.

தடயங்களை தவறவிட்டனர்

இறந்த ஒருவரின் உடலை பார்வையிடும் சாதாரண போலீசாரே அவர் எப்படி இறந்திருப்பார்? என எளிதாக அடையாளம் கண்டுபிடித்து விடலாம். ஆனால் அம்சபிரபா கற்பழித்து கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு இருக்கிறார். அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று அவரது பெற்றோர் தெரிவித்தும் கூட, உருளையன்பேட்டை போலீசார் எடுத்த எடுப்பிலேயே தற்கொலை வழக்காக பதிவு செய்தனர். மேலும் சரியாக விசாரணை நடத்தாமல் சம்பவ இடத்தில் பதிவு செய்யவேண்டிய தடயங்களையும் போலீசார் பதிவு செய்யவில்லை. தற்போது பிரேத பரிசோதனை அறிக்கையில் அவர் கற்பழித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளதால், கொலைக்கான தடயங்கள் இல்லாமல் தவிக்கின்றனர். சம்பவம் நடந்த உடனே எடுக்கவேண்டிய தடயங்கள் தற்போது 2 நாட்கள் ஆனதால் அது மறைந்துவிட்டது. தடயங்களை தவறவிட்ட போலீசார் குற்றவாளிகளை கண்டு பிடிக்க முடியாமல் திணறுகின்றனர்.

மேலும் செய்திகள்