கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் மிதக்கும் கழிவுகள்

கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் மிதக்கும் கழிவுகள், நீர்த்தாவரங்களால் மாசடைந்து வருகிறது.

Update: 2018-12-20 22:00 GMT
கொடைக்கானல், 

‘மலைகளின் இளவரசி‘யான கொடைக்கானல் நகரின் மையப்பகுதியில் நட்சத்திர ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரி ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் உருவாக்கப்பட்டது. மேலும் நட்சத்திர ஏரி சுமார் 4½ கி.மீ. சுற்றளவு கொண்டது ஆகும். கொடைக்கானல் வருகிற சுற்றுலா பயணிகள் இந்த ஏரியில் படகு சவாரி செய்வது வழக்கம்.

இந்த ஏரியில் இருந்து வெளியேறும் உபரிநீர், வெள்ளி நீர்வீழ்ச்சிக்கு செல்கிறது. அதுவே பழனி நகருக்கு குடிநீராக பயன்படுகின்றது. இந்தநிலையில் நட்சத்திர ஏரியில் கழிவுநீர் கலக்கிறது. இதனால் ஏரியில் பெரும் பகுதியில் கழிவுகளாக மிதக்கின்றன. இதைத்தவிர நீர்த்தாவரங்கள் ஏரியை ஆக்கிரமித்துள்ளன. மேலும் ஏரியில் ஆபத்தான ஜெல்லி மீன்களும் காணப்படுகின்றன.

இதற்கிடையே கடந்த மாதம் கஜா புயலின் போது கொடைக்கானல் பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் ஏரிக்கு அதிக அளவில் தண்ணீர் வந்தது. இதன் காரணமாக ஏரி நிரம்பி உபரிநீர் வெளியேற்றப்பட்டது. அதில் ஏரியில் மிதந்த கழிவுகள் பெருமளவு தண்ணீரில் அடித்து செல்லப்பட்டன.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக ஏரியில் அதிக அளவில் கழிவுகள் கலக்கின்றன. இதனால் ஏரி முழுவதும் துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதாரக்கேடு அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் ஏரியினை தூய்மைப்படுத்த தமிழக அரசு ரூ.88 கோடியில் திட்டத்தை அறிவித்தது. ஆனால் அதற்கான பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை.

இதனால் ஏரியில் கழிவுகள் சேர்ந்து, மாசடைந்து வருகிறது. எனவே, புகழ்பெற்ற நட்சத்திர ஏரியை தூய்மைப்படுத்துவதோடு, கழிவுகள் சேராமல் தடுக்க நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது சுற்றுலா பயணிகள், பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

மேலும் செய்திகள்