கோடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கில் பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்ட திபு ஊட்டி கோர்ட்டில் ஆஜர்
கோடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கில் பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்ட திபுவை கேரள போலீசார் ஊட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
ஊட்டி,
கோத்தகிரி அருகே உள்ள கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 24.4.2017-ந் தேதி காவலாளி ஓம்பிரகாஷ் கொலை செய்யப்பட்டார். இதில் மற்றொரு காவலாளி கிருஷ்ணபகதூருக்கு படுகாயம் ஏற்பட்டது. மேலும் எஸ்டேட் பங்களாவில் இருந்த பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டது. இதுகுறித்து கோத்தகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜ் மற்றும் சிலர் வழக்கில் சம்பந்தப்பட்டு இருப்பது தெரியவந்தது.
சம்பவம் நடந்த இரண்டு தினங்களில் சேலத்தில் நடந்த ஒரு விபத்தில் டிரைவர் கனகராஜ் இறந்து விட்டார். இந்த வழக்கு தொடர்பாக சயன், வாளையார் மனோஜ், மனோஜ்சாமி, திபு, ஜித்தின்ராய், உதயகுமார், சந்தோஷ்சாமி, சதீசன், சம்சீர் அலி, பிஜின் ஆகிய 10 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே கடந்த மாதம் 12-ந் தேதி வழக்கு விசாரணைக்கு திபு ஆஜராகவில்லை. அவர் வேறொரு வழக்கில் கண்ணனூர் சிறையில் இருந்து வருகிறார். வழக்கில் தொடர்புடைய மற்ற 7 பேரும் கோர்ட்டில் ஆஜராகினர். அப்போது நீதிமன்றத்தில் ஆஜராகாத திபுவுக்கு பிடிவாரண்டு பிறப்பித்தும், கோடநாடு வழக்கில் சம்பந்தப்பட்ட திபுவை நீலகிரி மாவட்ட கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என்றும் மாவட்ட நீதிபதி வடமலை கண்ணனூர் போலீஸ் சூப்பிரண்டுக்கு உத்தரவிட்டு இருந்தார்.
இந்த உத்தரவின்படி கேரள போலீசார் திபுவை நேற்று ஊட்டியில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் மாவட்ட நீதிபதி வடமலை முன்பு ஆஜர்படுத்தினர். திபு கண்ணனூர் சிறையில் இருந்ததால், அவர் மீது மாவட்ட நீதிமன்றம் பிறப்பித்த பிடிவாரண்டை வாபஸ் பெற வேண்டும், அவர் தொடர்ந்து வழக்கில் ஆஜராவார் என்று வழக்கறிஞர் சிவக்குமார் வாதிட்டு மனுத்தாக்கல் செய்தார். பின்னர் காவல்துறை சார்பில், திபுவுக்கு பிடிவாரண்டு ரத்து செய்யக்கூடாது, திபு சார்பில் போடப்பட்ட மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும், நீலகிரி மாவட்ட போலீசாரிடம் திபுவை ஒப்படைக்க வேண்டும் என்று அரசு வழக்கறிஞர் பாலநந்தகுமார் தெரிவித்தார். இரு தரப்பையும் கேட்டறிந்த நீதிபதி வடமலை, திபுவுக்கு பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்டை ரத்து செய்ய உத்தரவிட்டார். மேலும் கேரள போலீசார் கண்ணனூர் சிறைக்கு கொண்டு செல்ல அனுமதி அளித்து, வருகிற ஜனவரி மாதம் 10-ந் தேதி நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜராகும்படி உத்தரவிட்டார்.