யானைகள் விளைநிலங்களுக்கு வருவதை தடுக்க ஒதுக்கப்பட்ட நிதியில் வனப்பகுதியில் அகழிகள் முறையாக அமைக்காதது ஏன்?

நெல்லை மாவட்டத்தில் யானைகள் விளைநிலங்களுக்குள் புகுந்து சேதப்படுத்துவதை தடுக்க ஒதுக்கப்பட்ட ரூ.2 கோடி நிதியில் முறையாக வனப்பகுதியில் அகழிகள் அமைக்காதது ஏன்? என பொதுக்கணக்கு குழுவினர், அதிகாரிகளை கண்டித்தனர்.

Update: 2018-12-20 22:30 GMT
நெல்லை, 

நெல்லை மாவட்டத்தில் யானைகள் விளைநிலங்களுக்குள் புகுந்து சேதப்படுத்துவதை தடுக்க ஒதுக்கப்பட்ட ரூ.2 கோடி நிதியில் முறையாக வனப்பகுதியில் அகழிகள் அமைக்காதது ஏன்? என பொதுக்கணக்கு குழுவினர், அதிகாரிகளை கண்டித்தனர்.

ஆய்வு கூட்டம்

தமிழக சட்டமன்ற பொதுக்கணக்கு குழு தலைவர் துரைமுருகன் தலைமையில், உறுப்பினர்கள் நேற்று முன்தினம் நெல்லை மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை ஆய்வு செய்தனர். நெல்லை மாநகராட்சியில் நடைபெற்று வரும் பணிகள், குற்றாலம் பூங்கா, கடையநல்லூர் அரசு ஆஸ்பத்திரி உள்ளிட்ட இடங்களை ஆய்வு செய்தனர்.

நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள சாரல் அரங்கத்தில் அனைத்து துறை அலுவலர்கள் ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது. சட்டமன்ற பொதுக்கணக்கு குழு தலைவர் துரைமுருகன் தலைமை தாங்கினார். உறுப்பினர்கள் முகமது அபுபக்கர் (கடையநல்லூர்), டி.ஆர்.பி.ராஜா (மன்னார்குடி), டாக்டர் பரமசிவம் (வேடசந்தூர்), பாரதி (சீர்காழி), நடராஜ் (மயிலாப்பூர்), பாஸ்கர் (நாமக்கல்), உதயசூரியன் (சங்கராபுரம்) ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் ஒவ்வொரு துறை சார்பில் நடந்து வரும் பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

அகழிகள்

கூட்டத்தில் குழுவினர் பேசியதாவது:-நெல்லை மாவட்டத்தில் வனப்பகுதியில் இருந்து யானைகள் விளைநிலங்களுக்கு புகாமல் இருக்க அகழிகள் அமைக்க ரூ.2 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இந்த நிதி சரியாக செலவு செய்யப்படவில்லை. அகழிகள் அமைக்க ரூ.30 லட்சம் மட்டுமே செலவு செய்யப்பட்டு உள்ளது. முறையாக அகழிகளை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காதது ஏன்? பெரும்பாலான நிதியை செலவு செய்யாமல் வீணாக வைத்தது ஏன்? இந்த பணியில் அதிகாரிகள் அக்கறை செலுத்தவில்லை. இது கண்டிக்கத்தக்கது. மேலும் தோண்டப்பட்ட சில அகழிகளும் பராமரிக்கப்படாததால் யானைகள் தொடர்ந்து விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்துகிறது. இதேபோல் குரங்குகளுக்கான முகாம்களும் செயல்படுத்தப்படவில்லை. குற்றாலத்தில் சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கப்பட்டு உள்ளது. அந்த பூங்கா பராமரிக்கப்படவில்லை. இவ்வாறு அவர்கள் பேசினர்.

சாலைகள் மோசமான நிலையில்...

அபுபக்கர் எம்.எல்.ஏ. பேசும்போது, “நெல்லை- தென்காசி சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. சாலையோரத்தில் உள்ள மரங்கள் வெட்டப்பட்டு உள்ளன. சாலை அமைக்கும் பணி எப்போது தொடங்கும். கடையநல்லூர் தாலுகா அலுவலகம் ஊருக்கு வெளியே அமைக்கப்பட்டு உள்ளது. அங்கு பொதுமக்கள் சென்று வர முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. ஊருக்குள் தாலுகா அலுவலகத்தை மாற்ற வேண்டும்“ என்றார்.

இதற்கு பதில் அளித்த நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் சாந்தி, “ஏற்கனவே இந்த சாலை பணிகளுக்கு டெண்டர் விடப்பட்டு ரத்து செய்யப்பட்டது. எனவே மறு டெண்டர் விடுவதற்கான பணிகள் நடந்து வருகிறது“ என்றார். தொடர்ந்து குழு சார்பில் அதிகாரிகளிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.

கூட்டத்துக்கு பின்னர் துரைமுருகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

குற்றச்சாட்டுகள்

நெல்லை மாநகராட்சி நிர்வாகத்தின் செயல்பாடுகள், மாவட்ட நிர்வாகத்தின் சுகாதாரம், சட்டம்-ஒழுங்கு, குடிநீர் வடிகால் வாரியம் உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்தோம். அனைத்து துறை அதிகாரிகளையும் சந்தித்து பேச வாய்ப்பு கிடைத்தது. சிறு, சிறு குற்றச்சாட்டுகள் எழுந்ததால் ஆய்வு செய்தோம். அரசாங்கம் ஒதுக்கிய பணத்தை செலவு செய்தது தொடர்பாக மத்திய அரசு கணக்கெடுக்கும். அந்த தணிக்கை குழு அறிக்கை சட்டமன்றத்தில் வைக்கப்படும். அரசு பணம் செலவு செய்ய வேண்டும் என்றால் சட்டசபையில் ஒப்புதல் பெற வேண்டும்.

அதன் அடிப்படையில் மத்திய அரசின் தணிக்கை அறிக்கையில் குறிப்பிட்டது போல் ஒரு சில பணிகள் தாமதமாக நடந்து வந்தது. அதுபற்றி ஆய்வு செய்தோம். சட்டமன்றத்தில் பல குழுக்கள் இருக்கின்றன. கணக்கு குழு என்பதால் எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள் தலைவராக இருக்க வேண்டும் என்று அரசியல் சட்டத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது. அதன் அடிப்படையில் இந்த குழுவுக்கு நான் தலைவராக பொறுப்பேற்று இருக்கிறேன். எந்தெந்த கால கட்டங்களில் எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. அதை ஏன் முறையாக செலவு செய்யவில்லை என கேள்வி எழுப்பி இருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில், சட்டசபை செயலாளர் சீனிவாசன், கலெக்டர் ஷில்பா, எம்.எல்.ஏ.க்கள் மைதீன்கான், பூங்கோதை, லட்சுமணன், நெல்லை மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பழனி, நெல்லை மாநகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) நாராயண நாயர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்