கோர்ட்டு உத்தரவு எதிரொலி: ஈரோட்டில் பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த விளம்பர பேனர்கள் அகற்றம்

கோர்ட்டு உத்தரவு எதிரொலியாக ஈரோட்டில் பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த விளம்பர பேனர்கள் அகற்றப்பட்டது.

Update: 2018-12-20 22:00 GMT

ஈரோடு, 

தமிழகத்தில் விதிகளை மீறி சட்ட விரோதமாக டிஜிட்டல் பேனர் வைப்பதை தடுக்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில் டிராபிக் ராமசாமி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பொதுமக்களுக்கு இடையூறாக வைக்கப்பட்டு உள்ள அனைத்து விளம்பர பேனர்களையும் உடனடியாக அகற்ற வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

இதன் எதிரொலியாக ஈரோட்டில் ரோட்டோரங்களில் வைக்கப்பட்டு இருந்த விளம்பர பேனர்கள் அகற்றும் பணி நேற்று தொடங்கியது. இந்த பணியில் ஈரோடு மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர். அவர்கள் பொதுமக்களுக்கு இடையூறாக வைக்கப்பட்டு இருந்த விளம்பர பேனர்களை அகற்றி அதை லாரியில் வைத்து எடுத்து சென்றனர்.

இந்த பணி ஈரோட்டில் பன்னீர்செல்வம் பூங்கா, ஆர்.கே.வி.ரோடு, மேட்டூர்ரோடு, அரசு ஆஸ்பத்திரி ரவுண்டானா பகுதி ஸ்வஸ்திக் கார்னர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடந்தது. போலீசார் பாதுகாப்புடன் இந்த பணிகள் நடந்தது.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையாளர் சீனி அஜ்மல்கான் கூறும்போது, ‘ஈரோடு மாநகர் பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறாக விளம்பர பேனர்களை வைக்கக்கூடாது. மீறி வைக்கப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

மேலும் செய்திகள்