கிருஷ்ணகிரி அணையை மத்திய அதிகாரிகள் குழுவினர் ஆய்வு

கிருஷ்ணகிரி அணையை மத்திய அதிகாரிகள் குழுவினர் ஆய்வு செய்தனர்.

Update: 2018-12-20 22:00 GMT
கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி அருகே தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கே.ஆர்.பி.அணை அமைந்துள்ளது. இந்த அணையின் முதல் மதகில் உள்ள ஷட்டர் கடந்த நவம்பர் மாதம் உடைந்தது. இதனால் 1.5 டி.எம்.சி. தண்ணீர் தென்பெண்ணை ஆற்றில் திறக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து 12 அடி உயர ஷட்டர் தற்காலிகமாக அமைக்கப்பட்டது. பிறகு ரூ.3 கோடியில் புதிய ஷட்டர் அமைக்கப்பட்டது.

அணை கட்டப்பட்டு 65 ஆண்டுகள் ஆனதால் அணையில் உள்ள பிற 7 ஷட்டர்களையும் மாற்ற விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். இதற்காக ரூ.21 கோடியில் 7 ஷட்டர்களையும் மாற்றிட மத்திய நீர்வளத்துறையிடம் தமிழக அரசு பரிந்துரை செய்துள்ளது.

இந்த நிலையில் மத்திய நீர்வள ஆணையத்தின் கீழ் இயங்கும் மத்திய மேலாண்மை திட்ட அலகிலிருந்து தலைமை பொறியாளர் (அணை பாதுகாப்பு இயக்கம்) குல்ஷன்ராஜ் தலைமையில் அணை மதகுகள் மற்றும் நீர்வள ஆணைய இயக்குனர் டில்லி ஹர்கேஷ்குமார், துணை இயக்குனர் (மத்திய நீர்வள ஆணையம்) சவுரப்சரண், மத்திய நீர்வள ஆணைய ஆலோசகர்கள் வர்மா, ஹாலட்டர், வனீத்பாட்யா ஆகியோர் அடங்கிய குழுவினர் நேற்று கிருஷ்ணகிரி அணையினை நேரில் பார்வையிட்டனர்.

அப்போது அணை மதகுகளை அவர்கள் ஆய்வு செய்து, கலெக்டர் பிரபாகர் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்கள். பின்னர் புதிய ஷட்டரின் எடை, பழைய ஷட்டரின் எடை, புதிய ஷட்டர் எந்த வகையிலான இரும்பால் பொருத்தப்பட்டது என கேட்டனர். மேலும் ஷட்டர்களின் தற்போதைய நிலை குறித்து ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின் போது, தமிழ்நாடு பொதுப்பணித்துறை மாநில திட்ட இயக்க மேலாண்மை அலகு (நீர்வள ஆதாரம்) நடராஜன், தலைமை பொறியாளர்கள் ஜெயராமன், செல்வகுமார், செயற்பொறியாளர் மெய்யழகன், உதவி செயற்பொறியாளர் நடராஜன், உதவி பொறியாளர் சையத் ஆகியோர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்