மதுரை டாக்டர் வீட்டில் நடந்த கொள்ளை: கவர்னர் மாளிகை போலீஸ்காரர் உள்பட மேலும் 9 பேர் கைது

மதுரை டாக்டர் வீட்டில் நடந்த கொள்ளை தொடர்பாக கவர்னர் மாளிகை போலீஸ்காரர் உள்பட மேலும் 9 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தை அரங்கேற்ற திட்டம் போட்டு கொடுத்த திருப்பூர் போலீஸ்காரரை போலீசார் தீவிரமாக தேடிவருகிறார்கள்.

Update: 2018-12-19 23:45 GMT

மதுரை,

மதுரை மாவட்டம் மேலூர் காந்திஜி பூங்கா சாலையை சேர்ந்தவர் பாஸ்கரன் (வயது 67). டாக்டரான இவர், கடந்த 6–ந் தேதி நடைபயிற்சி சென்றிருந்தபோது, அவரது வீட்டினுள் புகுந்த 6 பேர் கும்பல், அவரது மனைவி மீரா(62) மற்றும் வேலைக்கார பெண், காவலாளி ஆகியோரை துப்பாக்கி மற்றும் பயங்கர ஆயுதங்களை காட்டி மிரட்டி பணத்தை கொள்ளையடித்து சென்றது.

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், இந்த கொள்ளைச் சம்பவத்தில் 26 பேருக்கு தொடர்பு இருந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் பதுங்கி இருந்த ராதாகிருஷ்ணன் (வயது 39) உள்பட 10 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.40 லட்சம் மற்றும் கார், துப்பாக்கிகள், தோட்டாக்கள் மற்றும் பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதில் ராதாகிருஷ்ணன் போலீஸ்காரராக பணியாற்றியவர் என்பதும், தற்போது அவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டு இருந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

சென்னை கவர்னர் மாளிகை பாதுகாப்பு பணியில் இருந்த மத்திய ரிசர்வ் படை போலீஸ்காரரான குமார் மூலமாகத்தான், மதுரை கொள்ளையர்களுக்கு துப்பாக்கி, தோட்டாக்கள் கிடைத்ததாகவும் அதிர்ச்சி தகவல் வெளியானது. இதையடுத்து சென்னையில் இருந்து மதுரைக்கு தப்பி வந்த குமாரை, மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து தீவிர விசாரணை நடத்தி நேற்று கைது செய்தனர்.

இந்த கொள்ளையில் சம்பந்தப்பட்டு, தற்போது தலைமறைவாக இருக்கும் திருப்பூர் போலீஸ்காரர் சரவணனை தேடும் பணி தீவிரமாக நடந்து வருவதாக மதுரை உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும் இந்த சம்பவத்தில் 3 போலீஸ்காரர்களுக்கு உண்டான தொடர்பு குறித்து அவர் கூறியதாவது:–

சம்பவம் நடந்த அன்று டாக்டர் வீட்டில் ரூ.5 லட்சம் கொள்ளை போனதாக புகார் கொடுக்கப்பட்டது. ஆனால், டாக்டர் வீட்டில் சுமார் ரூ.70 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை கொள்ளை போய் இருக்கலாம் என எங்களுக்கு சந்தேகம் வருகிறது. மேலும் அவரது வீட்டில் இருந்த வைர மோதிரம், தங்க வளையல்களையும் கொள்ளையர்கள் எடுத்துச் சென்றுள்ளனர்.

இந்த வழக்கில் தற்போது கைது செய்யப்பட்டவர்கள் ஒருவேளை தப்பி இருந்தால் அனைவரும் பெரிய அளவிலான குற்றச்சம்பவங்களை அரங்கேற்றி இருப்பார்கள். ஆனால் அதற்குள் அவர்களை நாங்கள் பிடித்துவிட்டோம். கொள்ளை சம்பவத்தில் மொத்தம் 26 பேருக்கு தொடர்பு இருந்தாலும், அவர்களில் 13 பேர்தான் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர். அதில் கணபதி, ஹரிவிக்னேஷ், சிவக்குமார், தமிழ்ச்செல்வன், தேவா, மணிகண்டன் ஆகியோர் மட்டுமே அன்றைய தினம் டாக்டர் வீட்டிற்குள் சென்று துப்பாக்கி முனையில் பணத்தை கொள்ளையடித்துள்ளனர். மற்ற 7 பேரும் அந்த தெரு பகுதி முழுவதையும் கண்காணித்துள்ளனர்.

அந்த டாக்டர் வீட்டில் பணம் மற்றும் நகை அதிகமாக இருப்பதை மருந்து விற்பனை பிரதிநிதியாக அங்கு சென்ற சுரேஷ்குமார்தான் அறிந்துள்ளார். அவர் அதுபற்றி கணபதிக்கு தகவல் கொடுத்துள்ளார். அதன் பின்னர் அவர்கள் திட்டம் தீட்டி பலரை தங்களுடன் சேர்த்துக்கொண்டனர். ஒவ்வொரு வேலையாக பங்கிட்டுக்கொண்டு, சம்பவத்தை அரங்கேற்றியுள்ளனர்.

அதற்கு தேவையான துப்பாக்கி, தோட்டாக்கள், ஆயுதங்களை மத்திய படை போலீஸ்காரரான குமார் வழங்கியுள்ளார்.

திருப்பூரை சேர்ந்த போலீஸ்காரர் சரவணன்தான் கொள்ளை சம்பவம் நடப்பதற்கு முன்பு அந்த வீடு இருந்த பகுதி மற்றும் எவ்வாறு கொள்ளையடிக்கலாம், அதில் எத்தனை பேர் வீட்டிற்குள் செல்லலாம், வீட்டிற்கு வெளியே யார்–யார் கண்காணிக்க வேண்டும்? என்பது குறித்து திட்டம்போட்டு கொடுத்தவர் ஆவார்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே டாக்டர் வீட்டில் நடந்த கொள்ளை தொடர்பாக மதுரை ஜெய்ஹிந்த்புரத்தை சேர்ந்த ராஜபாண்டி(25), தெற்குவாசல் தமிழ்ச்செல்வன்(22), மகாலிங்கம்(24), எல்லீஸ்நகர் தேவா(23), ஜீவாநகர் மணிகண்டன்(24), திருமங்கலம் ராஜேஷ்(40), மருதுபாண்டியன்(30), சாத்தங்குடி கண்ணன்(37) ஆகிய 8 பேரை நேற்று போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.11 லட்சத்து 70 ஆயிரம், 2 மோட்டார் சைக்கிள்கள், ஒரு செல்போனை ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர். இதன் மூலம் இந்த வழக்கில் மொத்தம் 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருப்பூர் போலீஸ்காரர் சரவணன் உள்பட இன்னும் 7 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

இந்த கொள்ளை சம்பவத்திற்கு துப்பாக்கி, தோட்டாக்கள் வழங்கிய மத்திய படை போலீஸ்காரர் குமார், மதுரை திருமங்கலத்தை சேர்ந்தவர் ஆவார். அவருடைய பெற்றோர் முருகன்–வள்ளி.

குமார் போலீஸ் பயிற்சியில் இருந்த போது, திருப்பூரை சேர்ந்த போலீஸ்காரர் சரவணனுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. அப்போது இருந்து இருவரும் நண்பர்களாக இருந்துள்ளனர். மேலும் சரவணனின் நண்பர் ஒருவருக்கும், மதுரையை சேர்ந்த கொள்ளை கும்பலுக்கும் அறிமுகம் ஏற்பட்டது.

குறுகிய காலத்தில் பணக்காரராக ஆசைப்பட்டு, கொள்ளையர்கள் அரங்கேற்ற நினைத்த சம்பவங்களுக்கு துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை கொடுக்க குமார் ஒப்புக்கொண்டுள்ளார். அவரிடம் இருந்து ஆயுதங்களை வாங்கி வரும் வேலையை போலீஸ்காரர் சரவணன் செய்துள்ளார். இப்படியாக கொள்ளையர்களுக்கும், போலீஸ்காரர்களுக்கும் தொடர்பு ஏற்பட்டு, டாக்டர் வீட்டில் கைவரிசை காட்டி உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

வேறொருவரிடம் வாடகைக்கு கார் வாங்கி, அந்த காரில் டாக்டர் வீட்டிற்கு சென்றுள்ளனர். அந்த கார் நம்பர்தான் போலீசாருக்கு கிடைத்த முதல் துப்பு என்பது குறிப்பிடத்தக்கது. அதை வைத்து அடுத்தகட்ட விசாரணை நகர்ந்த போது, பெரிய கும்பலே இதில் சம்பந்தப்பட்டு இருந்ததும், ஸ்லீப்பர்செல் மனிதர்கள் போன்று வெவ்வேறு இடங்களில் இருந்து வந்து, டாக்டர் வீட்டில் கொள்ளையடித்துச் சென்றதும் தெரியவந்துள்ளது. இதில் இன்னொரு முக்கியமான வி‌ஷயத்தையும் போலீசார் தெரிவித்தார்கள். கொள்ளையர்கள் அனைவருமே ஒருவருக்கு ஒருவர் அறிந்தவர்கள் அல்ல என்பதும், ‘நெட்வொர்க்‘ போன்று அவர்களை போலீஸ்காரர்கள் தொடர்புகொண்டு அடுத்தடுத்த கொள்ளை சம்பவங்களுக்கு திட்டமிட்டு வந்ததும் குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்