மதுரை சூப்பர் மார்க்கெட்டில் ரூ.1¾ லட்சம் கொள்ளை
மதுரையில் உள்ள பிரபல சூப்பர் மார்க்கெட்டில் பூட்டை உடைத்து ரூ.1 லட்சத்து 72 ஆயிரத்தை மர்ம ஆசாமிகள் திருடிச் சென்றனர்.
மதுரை,
* மதுரை விளாங்குடி மீனாட்சிநகரை சேர்ந்தவர் ஆசிப்இம்ரான்(வயது 28). இவர் திண்டுக்கல் மெயின்ரோடு மீனாட்சி நகரில் உள்ள பிரபல சூப்பர் மார்க்கெட்டில் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று இரவு சூப்பர் மார்க்கெட்டை மூடிவிட்டு சென்றுள்ளார். அப்போது மார்க்கெட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம ஆசாமிகள் அங்கு பணப்பெட்டியில் வைத்திருந்த ரூ.1 லட்சத்து 72 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்றனர். மேலும் கண்காணிப்பு கேமரா கருவிகளையும் திருடிச் சென்றனர். பின்னர் மறுநாள் காலை சூப்பர் மார்க்கெட்டை திறக்க வந்த ஆசிப் இம்ரான், பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் கொள்ளை சம்பவம் குறித்து அவர் உரிமையாளருக்கு தகவல் தெரிவித்தார். இதுகுறித்த புகாரின் பேரில் செல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
* மேலூர் தாலுகா கல்லம்பட்டியை சேர்ந்தவர் ஷெரிப் மகன் அப்துல்கனி(26). இவர் மீது நகரில் உள்ள போலீஸ் நிலையங்களில் வழிப்பறி, கொள்ளை உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன. இதையடுத்து அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்யுமாறு மாநகர போலீஸ் கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம் உத்தரவிட்டார். அதன் பேரில் அப்துல்கனியை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.
* மதுரை பழங்காநத்தம் மாடக்குளம் மெயின்ரோடு பகுதியில் கஞ்சா விற்பதாக கிடைத்த தகவலின்பேரில் போலீசார் அங்கு சென்றபோது, சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர். அதில் பழங்காநத்தம் அழகப்பன் நகரை சேர்ந்த காளிதாஸ்(27), பொன்மேனி பிரபாகரன்(19) ஆகியோர் கஞ்சா விற்றது தெரியவந்தது. இதனையடுத்து 2 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 2 கிலோ 450 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
* இதேபோல் செல்லூர் பாலம் பகுதியில் கஞ்சா விற்ற கீழதோப்பை சேர்ந்த பால்பாண்டி(45) என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து 1 கிலோ 150 கிராம் கஞ்சாவை செல்லூர் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக பாண்டிசெல்வம், ராணி ஆகியோரை தேடி வருகின்றனர்.
* மதுரை ரேஸ்கோர்ஸ் ரோடு பகுதியில் கஞ்சா விற்ற பாரதியார் நகரை சேர்ந்த ராம்குமார்(23) என்பவரை அண்ணாநகர் போலீசார் கைது செய்தனர்.
* மதுரை விஸ்வநாதபுரம், கிருஷ்ணபுரம் காலனியை சேர்ந்தவர் கருப்பையா மனைவி பாண்டியம்மாள்(45). இவர் ஆரப்பாளையத்தில் இருந்து மாட்டுத்தாவணி பஸ்நிலையத்திற்கு டவுன் பஸ்சில் சென்றார். கோரிப்பாளையம் அருகே பஸ் சென்று கொண்டிருந்த போது அவர் பையில் வைத்திருந்த மணிபர்சை காணவில்லை. அதில் 7 பவுன் நகை இருந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
* மதுரை பழங்காநத்தம் அழகப்பன் நகரை சேர்ந்த செல்வராஜ் மனைவி முத்துராக்கு(வயது 55), பாண்டின் நகர் வழியாக வீட்டிற்கு நடந்து சென்றார். அப்போது அவரை வழிமறித்த 2 பேர் தங்களை போலீஸ் என்று கூறினர். பின்னர் அவரிடம் நகைகளை கழற்றி காகிதத்தில் வைத்து கொண்டு செல்லுமாறு கூறியுள்ளனர். அதன்படி முத்துராக்கு கழுத்தில் அணிந்திருந்த 8 பவுன் நகையை கழற்றி கொடுத்துள்ளார். அப்போது நகையை காகிதத்தில் வைப்பது போல் நடித்து அந்த நபர்கள் நகையுடன் தப்பியோடிவிட்டனர். இதுகுறித்த புகாரின்பேரில் சுப்பிரமணியபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
* பேரையூர் அருகே சலுப்பப்பட்டி பஸ் நிறுத்தத்தில் அதே ஊரைச் சேர்ந்த கணேசபாண்டியன்(42) நின்று கொண்டிருந்தார். அப்போது, அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த நல்லுதேவன்பட்டியை சேர்ந்த வசந்தகுமார், அய்யர் ஆகியோர் கணேசபாண்டியன் வைத்திருந்த செல்போனை பறித்துச் சென்றனர். இதுதொடர்பாக சாப்டூர் போலீசார் வழக்குபதிந்து வசந்தகுமாரை கைது செய்தனர். அய்யரை தேடி வருகின்றனர்.