11 பேருக்கு வாய்ப்பு கிடைக்கிறது 5 மந்திரிகளை நீக்க காங்கிரஸ் திட்டம் பரபரப்பு தகவல்கள்
சரியாக பணியாற்றாத 5 மந்திரிகளை நீக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.
பெங்களூரு,
சரியாக பணியாற்றாத 5 மந்திரிகளை நீக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.
மந்திரிசபை விரிவாக்கம்
கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி ஆட்சி நடக்கிறது. முதல்-மந்திரியாக குமாரசாமி பணியாற்றி வருகிறார். கடந்த மே மாதம் இந்த கூட்டணி ஆட்சி பதவி ஏற்றது. இந்த ஆட்சி அமைந்து சுமார் 7 மாதங்கள் ஆகிறது.
மந்திரிசபையில் காங்கிரசுக்கு 6 இடங்கள் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கு 2 இடங்கள் என மொத்தம் 8 இடங்கள் காலியாக உள்ளன. இந்த காலி இடங்களை நிரப்பும் வகையில் கர்நாடக மந்திரிசபை விரிவாக்கம் வருகிற 22-ந் தேதி மாலை 5 மணிக்கு பெங்களூரு கவர்னர் மாளிகையில் நடைபெறும் என்று உறுதியான தகவல்கள் கூறுகின்றன.
அஞ்சலி நிம்பால்கர்
இதுகுறித்து ராஜ்பவனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மந்திரிசபையில் உள்ள காங்கிரசை சேர்ந்த ஜெயமாலா, புட்டரங்கஷெட்டி, சிவானந்தபட்டீல், சங்கர், ரமேஷ் ஜார்கிகோளி உள்ளிட்டோரை நீக்க அக்கட்சி திட்டமிட்டுள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.
மந்திரிசபையில் இருந்து 5 மந்திரிகளை நீக்கிவிட்டு, புதிதாக 11 பேருக்கு மந்திரி பதவி வழங்க காங்கிரஸ் தலைவர்கள் தீவிரமாக ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அஞ்சலி நிம்பால்கர், சிவள்ளி, எம்.பி.பட்டீல், எச்.கே.பட்டீல், பி.சி.பட்டீல், ராமலிங்கரெட்டி, சதீஷ் ஜார்கிகோளி, நாகேந்திரா, துகாராம் உள்ளிட்டோருக்கு மந்திரி பதவி கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.
தினேஷ் குண்டுராவ்
இதுகுறித்து விவாதிக்க மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ் நேற்று டெல்லி புறப்பட்டு சென்றார். மேலும் முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா, துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் ஆகியோரும் இன்று(வியாழக்கிழமை) டெல்லி செல்ல உள்ளனா்.