தண்ணீர் இல்லாததால் திரும்பிச்செல்லும் வெளிநாட்டு பறவைகள்

சாயல்குடி அருகே மேலச்செல்வனூர் கண்மாயில் தண்ணீர் இல்லாததால் வெளிநாட்டு பறவைகள் திரும்பிச் செல்கின்றன.

Update: 2018-12-19 22:15 GMT

சாயல்குடி,

சாயல்குடி அருகே உள்ள மேலச்செல்வனூரில் பறவைகள் சரணாலயம் 593 எக்டேர் பரப்பளவில் அமைந்துள்ளது. கண்மாய் உள்வாயில் அடர்ந்த மரங்கள் உள்ளன. தமிழக அரசின் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளதால் அப்பகுதி மக்கள் இந்த மரங்களை வெட்டுவதில்லை. மேலும் பறவைகளுக்கு இடையூறு ஏற்படும் வகையில் பட்டாசுகளும் வெடிப்பதில்லை.

இந்த நிலையில் தமிழக அரசு கடந்த 1998–ம் ஆண்டு இந்த கண்மாயை பறவைகள் சரணாலயமாக அறிவித்தது. மேலச்செல்வனூர் பறவைகள் சரணாலயத்திற்கு ஆஸ்திரேலியா, சீனா, ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளில் இருந்து செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் பறவைகள் வந்து தங்கி இனப்பெருக்கம் செய்து பின்னர் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் மீண்டும் அந்தந்த நாடுகளுக்கு திரும்பச்செல்வதை வழக்கமாக கொண்டுள்ளன.

இந்த பறவைகள் சரணாலயத்தில் நத்தைகொத்தி நாரை, வெள்ளை அரிவாள் மூக்கன், கருப்பு அரிவாள் மூக்கன், கூலைக்கடா, பாம்புதாரா, சிறிய நீர்க்காகம், பெரியநீர்க்காகம், நெடுங்கால் உள்ளான், முக்குழிப்பான், சிறிய கொக்கு, பெரிய கொக்கு, மஞ்சள் மூக்கு நாரை உள்ளிட்ட பல்வேறு வகையான பறவைகள் உள்ளன. மேலச்செல்வனூர் கண்மாய்க்கு வைகையில் இருந்து கூத்தன் கால்வாய் வழியாக தண்ணீர் கொண்டு வரப்பட்டது.

மேலும் மழைக்காலங்களில் அருகில் உள்ள ஓடைகளில் இருந்தும் வயல் வெளிகளில் இருந்தும் தண்ணீர் வழிந்தோடி கண்மாயில் சேரும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சமீப காலங்களாக காக்கூர், சடையனேரி, மேலச்சிறுபோது, சித்துடையான் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வைகையில் இருந்து தண்ணீர் வரக்கூடிய கூத்தன் கால்வாய் பகுதிகளை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளதால் தண்ணீர் வரத்து தடைப்பட்டுஉள்ளது.

கடந்த 3 வருடங்களாக இப்பகுதியில் போதிய மழையின்மையால் மழைநீரையும் சேமிக்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. மணல் கொள்ளையர்களால் சில இடங்கள் பள்ளமாகி போனதால் மழைத்தண்ணீர் வரத்தும் முற்றிலும் தடைப்பட்டுள்ளது. இதனால் கடந்த 2 வருடங்களாக மேலச்செல்வனூர் பறவைகள் சரணாலயத்திற்கு இனப்பெருக்கத்திற்காக வரும் வெளிநாட்டு பறவைகள் ஏமாற்றத்துடன் திரும்பிச்செல்கின்றன.

இந்த ஆண்டு குறைந்த பறவைகள் மட்டுமே இங்கு வந்துள்ளன. மற்றபடி உள்ளூர் பறவைகள் மட்டும் வேறு வழியின்றி தங்குகின்றன. எனவே மேலச்செல்வனூர் பறவைகள் சரணாலயத்தை காக்கும் வகையில் ஆக்கிரமிப்புகளை அகற்றி மழைநீர் வந்து சேரவும், கூத்தன் கால்வாய் வழியாக வைகை நீர் வந்தடையவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் விரும்புகின்றனர்.

மேலும் செய்திகள்