மதுரவாயல் அருகே சீமான் வீட்டை முற்றுகையிட முயற்சி 100 பேர் கைது
சீமான் வீட்டை முற்றுகையிட முயன்ற 100 பேர் கைது செய்யப்பட்டனர்.
பூந்தமல்லி,
யாதவ சமுதாய மக்களை அவதூறாகவும், இழிவாகவும் பேசியதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானை கண்டித்து, மதுரவாயலை அடுத்த ஆலப்பாக்கம் அஷ்டலட்சுமி நகரில் உள்ள சீமானின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவதற்காக நேற்று காலை கோகுலம் மக்கள் கட்சியின் தலைவர் சேகர் தலைமையில் 100-க்கும் மேற்பட்டோர் ஆலப்பாக்கம் மெயின்ரோட்டில் ஊர்வலமாக வந்தனர்.
மாநகராட்சி பூங்கா அருகே வந்தபோது, அவர்களை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த மதுரவாயல் போலீசார் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து அவர்கள் அதே இடத்தில் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அப்போது சீமானுக்கு எதிராக கோஷமிட்டனர்.
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து, அங்குள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். இதன் காரணமாக சீமான் வீடு உள்ள பகுதியில் அவரது கட்சியினரும், போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.