விழுப்புரம் அருகே பஸ் பயணியிடம் 23 பவுன் நகை அபேஸ் - 2 பெண்களுக்கு போலீஸ் வலைவீச்சு

விழுப்புரம் அருகே பஸ் பயணியிடம் 23 பவுன் நகையை அபேஸ் செய்த 2 பெண்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2018-12-19 22:15 GMT
விழுப்புரம், 

மதுரை திலைமான் விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் சவுந்திரபிரகாஷ் மனைவி சண்முகராணி (வயது 38). இவர் கடலூரில் உள்ள உறவினர் ஒருவரின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மதுரையில் இருந்து பஸ்சில் புறப்பட்டார்.

கடலூரில் நடந்த திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு மீண்டும் விழுப்புரம் வந்து மதுரை செல்வதற்காக கடலூரில் இருந்து விழுப்புரத்திற்கு அரசு பஸ்சில் புறப்பட்டார். பஸ்சில் கூட்ட நெரிசல் அதிகமாக இருந்ததால், தனது கழுத்தில் அணிந்திருந்த 23 பவுன் நகையை பாதுகாப்பு கருதி கழற்றி தன்னுடைய கைப்பையில் வைத்திருந்தார்.

இதனிடையே அந்த பஸ், விழுப்புரத்தை அடுத்த கோலியனூர் பஸ் நிறுத்தம் அருகில் வரும்போது சண்முகராணி, தனது கைப்பையை திறந்து பார்த்தபோது அதில் வைத்திருந்த நகை காணாமல் போயிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே பஸ்சில் இருந்த சக பயணிகளிடம் விசாரித்தும் நகை கிடைக்கவில்லை.

இதுகுறித்து சண்முகராணி, வளவனூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அந்த புகாரில், பஸ்சில் தான் அமர்ந்து பயணம் செய்த இருக்கையில் அமர்ந்திருந்த 2 பெண்கள், தன்னுடைய நகையை அபேஸ் செய்துவிட்டனர் என்று கூறியிருந்தார். பறிபோன நகையின் மதிப்பு ரூ.4½ லட்சமாகும்.

இதுகுறித்த புகாரின்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் சங்கரசுப்பிரமணியம் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை அபேஸ் செய்த 2 பெண்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்