வடநெம்மேலி முதலை பண்ணையில் தென் ஆப்பிரிக்க முதலை 7 குஞ்சுகள் பொரித்தது

கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள வடநெம்மேலி முதலை பண்ணையில் தென் ஆப்பிரிக்க முதலை 7 குஞ்சுகள் பொரித்தது.

Update: 2018-12-19 22:45 GMT
மாமல்லபுரம்,

காஞ்சீபுரம் மாவட்டம் மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள வடநெம்மேலி முதலை பண்ணையில் சுற்றுலா பயணிகள் கண்டுகளிக்கும் வகையில் பல்வேறு நாடுகளை சேர்ந்த 1000-க்கும் மேற்பட்ட முதலைகள் உள்ளன. இதில் இந்தியா, தென்ஆப்பிரிக்கா, அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா நாட்டு முதலைகள் அதிகம் உள்ளன.

இந்த நிலையில் தென் ஆப்பிரிக்கா காடுகளில் உள்ள நீர்நிலைகளில் உள்ள டவார்க் கெய்ன் என்னும் பெயருடைய 10 முதலைகள் இங்கு வரவழைக்கப்பட்டு, பார்வையாளர்கள் அதனை கண்டுகளிக்கும் வகையில் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தென் ஆப்பிரிக்க நாட்டு முதலை ஒன்று (டவார்க்கெய்ன்) முட்டை இட்டு 7 குஞ்சுகள் பொரித்துள்ளன. தற்போது இந்த முதலை குஞ்சுகள் கண்ணாடி தொட்டியில் வைத்து முதலை பண்ணை ஊழியர்கள் அதனை பாதுகாத்து வருகின்றனர். அந்த முதலைக்குஞ்சுகள் ஒரு வயதை கடக்கும் வரை கண்ணாடி தொட்டியில் பராமரிக்கப்படும் என்றும், தினமும் மீன் குஞ்சுகள் இந்த குஞ்சுகளுக்கு உணவாக வழங்கப்பட்டு வருவதாகவும் முதலை பராமரிப்பு ஊழியர்கள் தெரிவித்தனர்.

இந்த முதலை குஞ்சுகள் 3 வயதை கடந்த பிறகு தண்ணீர் குளத்திற்குள் விடப்பட்டு பார்வையாளர்களுக்கு அவை காட்சி படுத்தப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர். தற்போது ஒரு தனி அறையில் இந்த முதலை குஞ்சுகள் கண்ணாடி அறைக்குள் தண்ணீர் நிரம்பிய தொட்டியில் வைத்து பாதுக்காக்கப்படுகிறது.

மேலும் செய்திகள்